காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி…? 10% இட ஒதுக்கீட்டால் காங்கிரசில் வெடித்த திடீர் சர்ச்சை!

Author: Babu Lakshmanan
9 November 2022, 5:51 pm

ஜோதிமணி

தேசிய அளவில் ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படும் போதெல்லாம், டெல்லி காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவிற்கு எதிராக தமிழக காங்கிரஸ் எம்பிக்களில் சிலர் மாறுபட்ட கருத்தை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.

அது பாஜகவுக்கு எதிராக சுடச்சுட பதிலளிப்பது போல இருந்தாலும் சில நேரங்களில் அந்த எம்பிக்கள் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதுபோல கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி விடுகின்றனர்.

Congress MP Jothimani - Updatenews360

இதில் முதலிடத்தில் இருப்பது கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

10 % இடஒதுக்கீடு

அண்மையில், சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மூன்று நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

“இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இதற்கான நடவடிக்கையை சட்ட ரீதியாக முறைப்படி மோடி அரசுதான் மேற்கொண்டது. எனவே இந்த பெருமை முழுவதும் பாஜகவைத்தான் சேரும்” என்று அக்கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறி வருகின்றனர்.

supreme_court_updatenews360

முன்பே காங்கிரஸ்..

காங்கிரசும் இதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறது.

அதன் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. SC / ST / OBC / MBC ஆகிய பிரிவுகளுக்குள் வராத முற்பட்ட வகுப்பினருக்கே இந்த இட ஒதுக்கீடு பொருந்துகிறது.

jairam_ramesh_updatenews360

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படைப் பணிகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2005-06ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இது குறித்து ஆராய சின்ஹோ ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது பரிந்துரையை 2010-ல் வழங்கியது. அதன் பிறகு நாடு தழுவிய விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, 2014-க்குள் மசோதா தயாரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சமூக நீதிக்கு பின்னடைவு

ஆனால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, அதன் கூட்டணி கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக போன்றவை இத்தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த பின்னடைவு என்று கூறி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், “இந்த வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

CM Stalin - Updatenews360

இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அதேநேரம், ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றார். அவர் கூறும் போது “இந்தியாவில் 5,000 ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு, அந்த நடைமுறையை ஜவஹர்லால் நேரு உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது சமூக நீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது. இது சரியான நடவடிக்கைதான்” என்று கூறியுள்ளார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளது.

எதிர்ப்பு

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் காங்கிரஸின் மேலிடமும், தமிழக காங்கிரஸ் தலைவரும் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் இருவரும் அதற்கு நேர் மாறாக கருத்து கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். அதுவும் திமுக கூறியுள்ள அதே காரணங்களை அப்படியே காப்பி அடித்ததுபோல இருவரும் கூறி இருக்கிறார்கள்.

ஜோதிமணி எம்பி தனது பதிவில், “உச்சநீதிமன்றத் தீர்ப்பு நூற்றாண்டு கால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக,சமவாய்ப்புகளை உருவாக்கவும்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது.

சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது ஆகும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டிருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீட்டை அணுகுவதில் இருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3க்கு 2 என்னும் நீதிபதிகளின் பிளவுபட்ட தீர்ப்பு என்பது கவனிக்கப்பட வேண்டிய மாறுபட்ட கண்ணோட்டங்களைக் குறிக்கிறது. EWS-ன் அளவுகோலும் தன்னிச்சையானது. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உதவாது” என்று தெரிவித்துள்ளார்.

இரட்டை வேடம்

ஜோதிமணியின் பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணன், இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக ஜோதிமணி பேசுவது யாருக்காக? இந்த இரட்டை வேடம் யாருக்காக?.. என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும்போது, தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணியும், கார்த்தி சிதம்பரமும் அதை எதிர்ப்பது ஏன்? தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியா? அல்லது ஜோதிமணியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காங்கிரஸ் மேலிடம் சொல்வதுதான் சரி என்று ஒப்புக்கொள்ளாமல் தங்கள் இஷ்டம் போல் கட்சிக்கு அவதூறு ஏற்படும் விதமாக கருத்து தெரிவித்து இருப்பது ஏற்புடையது அல்ல என்று அவர்கள் இருவரையும் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

கூட்டணியில் சூறாவளி

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறும்போது,”கட்சித் தலைமை தெரிவிப்பதுதான் அதிகாரபூர்மான நிலைப்பாடு” என்று இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“ஆனால் இந்த பிரச்சனையில் ஜோதிமணியும், கார்த்தி சிதம்பரமும் மாறுபட்ட கருத்து தெரிவித்திருப்பது அவர்களது எதிர்கால அரசியல் லாபம் கருதித்தான் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்” என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

“2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தமிழகத்தில் காங்கிரசால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது அரசியலில் இல்லாதோரும் நன்றாக அறிந்த விஷயம். ஜோதி மணியைப் பொறுத்தவரை சில மாதங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வாங்குவது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக திடீரென தர்ணா போராட்டத்தில் குதித்து மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மறைமுகமாக கடும் நெருக்கடியும் கொடுத்தார்.

இதை அமைச்சர் மட்டும் இன்றி, திமுக தலைமையும் ரசிக்கவில்லை. இதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஜோதிமணிக்கு வந்துவிட்டது. அந்த அச்ச உணர்வு காரணமாகத்தான், 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் ஜோதிமணி எடுத்து இருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது.

அதேபோல்தான் சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வை எதற்காக நான் ஆதரிக்கிறேன் என்று கார்த்தி சிதம்பரம் ஊடகங்களில் விளக்கம் அளித்து இருந்தார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றும் விதமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற, திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து அறிவாலய வட்டாரத்தை எரிச்சல் அடைய வைத்தது.

அதனால் அவருக்கும் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்ற கோசம் அண்மைக்காலமாகவே திமுகவில் சூறாவளியாக சுழன்றடித்து வருகிறது. இதனால்தான் கார்த்தி சிதம்பரமும் தனிப்பட்ட கருத்து என்ற முறையில் 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக குரல் எழுப்பி இருக்க வாய்ப்பு உண்டு.

ஆனாலும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே அதை காங்கிரஸ் வரவேற்பதாக கூறிவிட்டார். அப்படி இருக்கும்போது, கட்சி மேலிடம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே ஜோதிமணியும், கார்த்திக் சிதம்பரமும் எதற்காக எதிர் கருத்து தெரிவித்தார்கள்?என்ற கேள்வியும் எழுகிறது. இதனால்தான் இவர்கள் இருவரும் மீதும், டெல்லி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முழக்கம் தமிழக காங்கிரசில் வேகமாக எழுந்துள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் பாஜகவை தீவிரமாக எதிர்ப்பதற்காக திமுகவின் தயவு எப்போதும் தேவை என்பதால் தமிழக காங்கிரஸ் ஜோதிமணியும் கார்த்திக் சிதம்பரமும் கூறியதை கண்டிக்க முன் வருமா? என்பதும் சந்தேகம்தான். அப்படியே பூசி மெழுகி விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இரு கட்சிகளும் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்ளும்போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும், ஆதரிப்பதும்
அந்தந்த கட்சிகளின் கொள்கை நிலைப்பாடு. அது அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று எனக் கூறி ஒன்றாக இணைந்து விடுவார்கள்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 616

    0

    0