முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி ; நாளை முதல் பேருந்துகள் ஓடுவதில் சிக்கல்… திட்டமிட்டபடி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஸ்டிரைக்…!

Author: Babu Lakshmanan
8 January 2024, 2:27 pm

அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. மறுநாளே அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்தடுத்து நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அறிவித்தபடி ஜனவரி 9ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வர இருப்பதால், பண்டிகைக்கு பிறகு கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்து தங்களின் முடிவில் உறுதியாக உள்ளனர்.

இதையடுத்து, வேலைநிறுத்தத்திற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அரசின் பதிலில் திருப்தி அளிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்கத்தினர், அரசின் பதிலில் திருப்தி அளிக்காததால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என்றும், பேருந்துகளின் இயக்கம் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதனிடையே, தொ.மு.ச. உள்ளிட்ட சங்களில் உள்ள தொழிலாளர்களின் உதவியுடன் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி