ஏற்கனவே மனஉளைச்சல்.. இதுல இலக்கு நிர்ணயித்து இம்சைப்படுத்துவதா?… அரசு போட்ட திடீர் கண்டிஷன்… அலறும் அரசு பஸ் டிரைவர்கள்!

Author: Babu Lakshmanan
7 September 2022, 5:06 pm

நஷ்டத்தில்…

தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்கி வருவது யாருக்கு தலைவலியாக இருக்கிறதோ, இல்லையோ அதில் டிரைவர்களாகவும் கண்டக்டர்களாகவும் பணிபுரிபவர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுமே நிதிச்சுமையில் தத்தளித்து வருவதுதான். அதன் மொத்த இழப்பு 49 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி தகவலும் உண்டு.

Bus Strike - Updatenews360

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு மே மாதம் முதலே அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தொடர்ந்து அவ்வப்போது ஏதாவது ஒரு விதத்தில் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

பெண்கள் அவமதிப்பு

திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

அப்போது இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களை அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் அவமானப்படுத்துகிறார்கள், பஸ்களை உரிய இடத்தில் நிறுத்தி இறக்கி விடாமல் சண்டை சச்சரவில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து இலவச பயணம் என்பதால் பெண்களை அவமதிக்க கூடாது. அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் என, ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மீறி நடந்து கொள்பவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதன் பிறகு அவர்களுக்கு, அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது.

பெண்கள் கை செய்கை மூலம் பஸ்சை நிறுத்த முயன்றால் உடனே நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். நிறுத்தத்தை விட்டு, சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்தக் கூடாது.

குறிப்பாக பயணிகள் யாரும் ஓடிவந்து ஏறும் வகையில் பேருந்துகளை இயக்கக் கூடாது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் செயல்பட வேண்டும் என்ற நிபந்தனைகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

எச்சரிக்கை

அதேபோல் அரசு பேருந்துகளின் படியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த நிலையில்தான் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படுவதில்லை, இதனால் பெண்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது, திட்டமிட்டபடி பயணத்தை அவர்களால் அமைத்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது ஆளும் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று பொது வெளியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Triupur Bus Strike - Updatenews360

இதனால் பதறிப்போன அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், “தற்போதைய நிலையில் சென்னையில் தினம்தோறும் 3,233 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவையின்றி பணிக்கு வராமல் இருப்பதை தவிர்க்கவும், பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், சாதாரண பேருந்துகளின் 100 சதவீத இயக்கத்தை உறுதிப்படுத்தவும், கடைசி பேருந்துகள் மற்றும் இரவு நேர பேருந்துகளை நிறுத்தி வைக்காமல் சரியாக இயக்கவேண்டும்” என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினர். இது அறிவுறுத்தல் என்று கூறப்பட்டாலும் கூட அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களைப் பொறுத்தவரை மறைமுகமாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

புதுஉத்தரவு

தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.

“14-வது ஊதிய பேச்சுவார்த்தையின்படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு 10 கோடி ரூபாய் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக மாதத்திற்கு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது. மீதமுள்ள 6 கோடியே 60 லட்சம் ரூபாயை பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாக மட்டுமே வசூலிக்கவேண்டும். எனவே பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்கவும், நிதிச் சுமையை குறைக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்ற வேண்டும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய நிபந்தனைதான், தங்களுக்கு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருப்பதாக, மாநகர அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்களும் நடத்துனர்களும் மனம் குமுறுகின்றனர்.

தனியார்மயமா..?

இதுபற்றி அவர்களில் சிலர் கூறியதாவது: “ஏற்கனவே எங்களுக்கு டீசல் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த இலக்கையே எங்களால் இன்னும் அடைய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில், டிக்கெட்டுகளை முறையாக விற்பனை செய்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக எங்களுக்கு புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பேருந்தில் முழுமையாக பயணிகளை ஏற்றவேண்டும். குறைந்த பயணிகளோடு செல்லக் கூடாது. பேருந்து நிறுத்தங்களில் முறையாக நின்று பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

இது பலவித நெருக்கடிகளை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. ஒரு முனையத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு பயணிகள் ஏறவில்லை என்றால் பேருந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு எடுக்க முடியாத நிலைதான் ஏற்படும். இதனால் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகள் உரிய நேரத்தில் இன்னொரு முனையத்தை அடைவது கடினம். அதேபோல் சில நேரம் ஓரிடத்தில் பயணிகள் அதிகமாக ஏறுவார்கள். ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே அவர்களில் பெரும்பாலானோர் இறங்கி விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது? என்ற குழப்பம்தான் ஏற்படும்.

நிர்ணயித்த இலக்கை அடையாவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதும் தெரியாது. இதனால் பயணிகள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மாநகர பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பாடுதிண்டாட்டம்தான்.

இந்த கடும் நிபந்தனையால் எங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு நிச்சயம் பெரிய அளவில் பாதிப்பு உருவாகும்.

சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வை காரணம் காட்டி, அதை ஈடு கட்டுவதற்கு முழுமையான அளவில் பயணிகளை பேருந்தில் ஏற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் தெரியவில்லை?..

டாஸ்மாக் வருவாயை பெருக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்வது போல சேவை நோக்கோடு நடத்தப்படும் பஸ் போக்குவரத்தில் அதை திணிக்க முயற்சிப்பது, சரியான நடவடிக்கையும் அல்ல. ஏனென்றால் எல்லா வழித்தடங்களிலும் மாநகர போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவது சவாலான ஒன்றாகவே இருக்கும்.

இது பணிச்சுமையை அதிகரித்து எங்களுக்கு மன உளைச்சலைதான் ஏற்படுத்தும். வேலைக்கு வரும்போதே இன்று அதிக கலெக்சன் ஆகுமா? ஆகாதா?… என்ற குழப்பத்துடன்தான் பணியை தொடங்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும்.

பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தங்களது ஊழியர்களுக்கு இலக்கை நிர்ணயித்து பணியாற்றும்படி வலியுறுத்தும். அப்படிப் பார்த்தால் திமுக அரசு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் தனது கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து கழகத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது. தவிர மாநகர அரசுப் பேருந்துகளை தனியார் மயமாக்குவதற்குரிய சோதனை முயற்சியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்.

ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பு, சென்னை நகரில் மட்டும் ஆயிரம் தனியார் டவுன் பஸ்களை இயக்குவதற்கு அரசு அனுமதிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மறுத்தார். அதற்கு தற்போது மாற்று வழியை கண்டுபிடித்து விட்டார்களோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

அரசு சாதாரண டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள தமிழக அரசு ஆயிரத்து 600 கோடி ரூபாயை இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த சலுகையை வறிய, நலிந்த, ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டுமே அரசு வழங்கினால் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். ஆனால், அரசு அதைச் செய்ய ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை.

ஆன்லைன் பதிவுக்கு ஆஃபர்

மேலும் என்னதான் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் படிகள், ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டும் மேற்கூரையில் ஏறியும் சாகச பயணம் செய்வதை எங்களால் தடுக்க முடியவில்லை. இதற்கு எப்படி ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பொறுப்பு ஏற்க முடியும்?…

இதுகுறித்து சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் அறிவுரை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்.

இதன் காரணமாக காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இந்த இக்கட்டான நிலையில்தான் முழுமையான அளவில் பயணிகளை ஏற்றவேண்டும்
என்று திடீர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள்.

இதை நினைத்தாலே வயிற்றை கலக்குகிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போது அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி, போக வர ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் கட்டணம் குறைவு என சில யுக்திகளை செயல்படுத்துவது போல புதுமையான வேறு திட்டங்களை மாநகர அரசு பேருந்துகளில் கையாண்டால் எஞ்சிய 6 கோடியே 60 லட்சம் ரூபாயை ஈடு கட்டிவிட முடியும்.

மாறாக, அந்த சுமையை எங்கள் தலையில் தூக்கி வைப்பது ஏற்கக் கூடியது அல்ல” என்று மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவர்களும், கண்டக்டர்களும் வேதனையுடன் கொந்தளிக்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 673

    0

    0