தொடரும் தமிழக அரசு – ஆளுநர் மோதல்… தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல ; எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 2:24 pm

அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுனர் உரையில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஆளுனரின் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுனரின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஆண்டு ஆளுனர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதே தான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுனர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுனர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுனர் அலுவலகத்திற்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை.

தமிழக அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதல் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசும் ஆளுனரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும், ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. இப்போக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உருவாகிவிடும். இனியாவது இரு தரப்பும் நடந்ததை மறந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 358

    0

    0