லியோ படக்குழுவின் கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு… முதல் 5 நாட்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை… அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan11 October 2023, 4:19 pm
லியோ படக்குழுவின் கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு… முதல் 5 நாட்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை… அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!!
லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகளை திரையட தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாக இரு வாரங்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு படக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது, படம் வெளியாகும் 19ம் தேதியில் 7 காட்சிகளுக்கும், மற்ற விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 6 காட்சிகளுக்கும் அனுமதி கேட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு மட்டும் 5 காட்சிகளை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, படம் வெளியாகும் நாளான 19ம் தேதி வியாழக்கிழமையும், 20ம் தேதி வெள்ளிக்கிழமையும், வார இறுதி நாட்களான 21,22 தேதியும் (சனி, ஞாயிறு), அரசு விடுமுறை தினங்களான (ஆயுத பூஜை) 23ம் தேதி திங்கட்கிழமையும், (விஜயதசமி) 24ம் தேதியும் என 5 நாட்களுக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பதால் பொதுவாக திரையரங்குகளில் 9 மணி காட்சிகளே திரையிடப்படும். எனவே, லியோ திரைப்படம் 19ம் தேதி 9 மணிக்கே வெளியாக அதிக வாய்ப்புள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.