தென்மாவட்டங்களில் கலவர அபாயம்.. அரசுப் பள்ளி மாணவர்களின் ஜாதிய மோதலுக்கு முடிவு கட்டப்படுமா…? திமுக அரசுக்கு புதிய தலைவலி…!

Author: Babu Lakshmanan
3 May 2022, 5:13 pm

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் கேள்விக்குரியதாக மாறி இருக்கிறது.

அராஜகம்

அதுவும் கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முழுநேரமும் செயல்படத் தொடங்கிய பின்பு அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே காணப்படும் போக்கு வேதனை கொள்ளும் அளவிற்கு உள்ளது. மாணவர்கள் அரசு டவுன் பஸ்களில், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டும் ஜன்னல் கம்பிகளில் தொற்றிக் கொண்டும் சாகச பயணம் செய்வது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அதைத்தொடர்ந்து பள்ளிகளில் ஆசிரியர்களை அடிக்கப் பாய்வது, ஆசிரியை முன்பாக நாற்காலியை தலைக்கு மேலாக தூக்கி வைத்துக்கொண்டு நடனமாடுவது, ஸ்டீல் பெஞ்ச் மேஜைகளை அடித்து நொறுக்குவது என்று கோர தாண்டவம் ஆடிய காட்சிகளும் அரங்கேறின.மாணவர்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஓடும் அரசு பஸ்ஸில் குஷியாக பீர் அருந்திக் கொண்டே பள்ளி மாணவிகள் ஆடிப் பாடிய காட்சிகளும் சமூக ஊடங்களில் வைரலாகி பெற்றோரின் வயிற்றில் புளியை கரைத்தது.

அதுமட்டுமன்றி சென்னை புது வண்ணராப்பேட்டையில் அரசு கல்லூரி மாணவிகள் சுமார் 20 பேர் மக்கள் நடமாட்டம் நிறைந்த பஸ் நிறுத்தம் அருகே குடுமிப்பிடி சண்டை போட்டு சினிமா படக் காட்சிகளையெல்லாம் மிஞ்சினர். மறுநாளே மதுரை பெரியார் பஸ் நிலையத்தில், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சாதிய கொலை

இந்த சலசலப்புகள் அடங்குவதற்குள், திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர், ஜாதிக் கயிறு கட்டுவது தொடர்பான மோதலில் சில மாணவர்களால் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பரபரப்பு.. கோஷ்டி மோதல்.. தலையில் பலத்த அடி.. மாணவன் உயிரிழப்பு..  ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

இந்த தாக்குதல் நடந்தபோது, மாணவர்களிடம் கவனக்குறைவாக இருந்ததாக உடற்கல்வி ஆசிரியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3 மாணவர்கள் மீது கொலை வழக்கும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பார்க்கும்போது மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ -மாணவிகளின் மனம் ஏதோ ஒரு வகையில் கொந்தளிப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு மட்டுமில்லாமல் மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கும் பெரும் தலைவலியை தரும் நிகழ்வாக மாறியுள்ளது.

ஆனால் இப்படியொரு சம்பவம் நடந்தது பற்றி சமூகநீதி பேசும் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக போன்றவை பெரிதாக வாய் திறக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

பாஜக கண்டனம்

அதேநேரம், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறும்போது, “இது ஏதோ தற்செயலாக நடந்துள்ள சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை. பல நாட்களாக இந்த விவகாரம் புகைந்து கொண்டிருந்திருக்க கூடிய சூழ்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திருந்தால் மோதலையும், உயிரிழப்பையும் தடுத்திருக்கலாம்.

Fact check: No, BJP has not promised to rename Tamil Nadu to 'Dakshina  Pradesh' | The News Minute

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. ஜாதிய சிந்தனையற்ற, அனைத்து மாணவர்களையும் கண்டிப்போடு, அரவணைத்து செல்ல கூடிய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை அந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் உடன் நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே ஜாதிய வெறியை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. இல்லையேல் அடுத்த தலைமுறையின் வளர்ச்சி கேள்விக்குறியே! ஜாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டி கொள்ளும் அரசியல் கட்சிகள் வெட்கப்பட வேண்டிய கேடுகெட்ட நிலை” என கண்டனம் தெரிவித்தார்.

அமைச்சர் விளக்கம்

திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது “பள்ளி மாணவர்கள் ஜாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது.

கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான ஜாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. திருநெல்வேலியில் ஜாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது. அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும்.

Anbil - Updatenews360

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை மாடலாக கருதக்கூடாது. இளம் கன்று பயமறியாது என்பதை மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்குவதில் காட்டக் கூடாது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்து துறையிடம் ஆலோசித்து வருகிறோம். மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் மாணவ, மாணவிகள் மோதிக்கொள்வது மாதிரியான சம்பவங்களை தடுக்க யுனிசெப் அமைப்பு மூலம் இரண்டரை லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

அரசியல் பின்னணி

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளில் பலர் இப்படி அத்துமீறி நடந்து கொள்ளுவது சமூக ஆர்வலர்களை மிகவும் வேதனைப் பட வைத்துள்ளது.

“கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடம் வீடுகளுக்குள் மாணவ, மாணவிகள் முடங்கிக் கிடந்தார்கள் என்பதற்காக அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

Govt School Boys Suspend -Updatenews360

ஏனென்றால் அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் சாகச பயணம் செய்வதை தடுக்க
அவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும், நடத்துனரும் பணியாற்றவேண்டும். புகார்கள், சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுதான் முதலில் அரசு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் இப்போது, பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை மாணவர்கள் தவிர்க்கவேண்டும். அதற்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் போதிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்று கல்வி அமைச்சரே அறிவுரை கூறுகிறார்.

தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜாதிக் கயிறு கட்டும் விவகாரம் தென் மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மாணவர்களிடையே வழக்கத்தில் உள்ளது. இதை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை. காரணம் இதன் பின்னால் அரசியல் உள்ளதை அவர்கள் நன்கு அறிவார்கள். தவிர அரசு பள்ளி ஆசிரியர்களிலேயே பெரும்பாலானவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஜாதிக் கயிறு கட்டி தங்களை யார் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை சில அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காக ஊக்குவிக்கவும் செய்கின்றன. அப்போதுதான் எதிர்காலத்தில் தங்களது கட்சியில் மாணவர்கள் தாங்களாகவே இணைந்து விடுவார்கள். தேர்தலில் ஓட்டும் தன்னால் விழுந்துவிடும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.

அந்த மாணவர்கள் வசிக்கும் கிராமங்களிலும் ஜாதியத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடுகள், தெருக்கள்தோறும் தங்கள் கட்சியின் வண்ணத்தை தீட்டி வெளிப்படுத்துகிறார்கள். இந்த போக்கு தற்போது தீவிரம் அடைந்திருக்கிறது.

எனவே தமிழக அரசு, இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்ட கிராமங்களில் ஜாதிய பிரச்சனை, மோதல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். மாணவர்கள் மீது எந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஜாதிய வன்மத்தை தூண்டி விட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையென்றால், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சுருங்கிப் போய் தனியார் பள்ளிகளில் சேருவது அதிகரித்துவிடும். மேலும் இதுபோன்ற ஜாதிய அடையாளம் மாணவர்களிடம் வெளிப்படுவது தெரிந்தால் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடக்கத்திலேயே கண்டறிந்து அவர்களை வெளியேற்றிவிடுவார்கள்”
என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1403

    0

    0