ரூ.1000 கொடுத்து விட்டு மற்ற வரிகளை உயர்த்துவதா..? உடைந்தது திமுகவின் குட்டு…!!
Author: Babu Lakshmanan13 October 2023, 8:03 pm
தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே அதன் மூலம் ஒரு ஆண்டுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச நிதியான 12 ஆயிரம் கோடி ரூபாயை எங்கிருந்து திரட்டுவது அதனால் ஏற்படும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்திற்கு திமுக அரசு தள்ளப்பட்டுவிட்டது என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.
தற்போது ஒரு கோடியே ஆறு லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு
ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு இதில் மேலும் ஒன்பது லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. இதனால் 2024-2025 நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கு தேவைப்படும் பணம் 14,000 கோடி ரூபாய் என்பது வெளிப்படையான உண்மை.
தேர்தலில் அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் பெண்களின் ஓட்டுகளை அப்படியே அள்ளி விடலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மனக்கணக்கு போட்டும் வைத்திருந்தார். அதேநேரம் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதியை ஒதுக்க திமுக அரசுக்கு மனமில்லை, அதனால்தான் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
முதல் கட்டமாக ஏழாயிரம் கோடி ரூபாய் மகளிர் உரிமை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதில் கூட பட்டியலின மக்களின் வளர்ச்சி நிதிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 1500 கோடி ரூபாயை திமுக அரசு பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில்தான் திமுக அரசு ஆயிரம் ரூபாயை திட்டத்திற்காக நூதன முறையில் நிதியை திரட்ட முடிவெடுத்து அதை படிப்படியாக செயல்படுத்தவும் தொடங்கிவிட்டது என்ற இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குறிப்பாக டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அவ்வப்போது உயர்த்துதல்,
ஆவின் நிறுவனத்தின் வெண்ணை, நெய் மற்றும் பால் பொருட்களின் விலையை பல மடங்கு அதிகரிப்பது, வாகன விற்பனை வரி, ஆயுட் கால வரி மற்றும் நில விற்பனையில் சந்தை வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் திமுக அரசு தடாலடியாக இறங்கி உள்ளது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 500 மதுபான கடைகளை மூடுகிறோம் என்று அறிவித்துவிட்டு அதன் மூலம் கிடைத்து வந்த வருவாயை ஈடு கட்டுவதற்காக கடந்த ஜூலை மாதம்
19ம்தேதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் விற்பனை செய்யப்படும் பீர், ஒயின் உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் தாறுமாறாக உயர்த்தியது. அதாவது, குவார்ட்டருக்கு 10 முதல் 320 ரூபாய் வரை விலை ஏற்றம் செய்யப்படுவதாக டாஸ்மாக் அறிவித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மது பிரியர்கள் மீள்வதற்குள் இம்மாத தொடக்கத்தில் இன்னொரு குண்டையும் டாஸ்மாக் தூக்கி போட்டது. அதன்படி மதுவகை மற்றும் அளவை பொறுத்து 5 முதல் 50 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.
இந்த மதுபான விலை உயர்வால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை விலையை பல மடங்கு உயர்த்தியதால் அதன் மூலமும் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வரை தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்ல, செப்டம்பர் 14ம் தேதி முதல் ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும் அரை லிட்டருக்கு 50ம் உயர்த்தப்பட்டது. அரை கிலோ வெண்ணை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு மூலமும் ஆண்டுக்கு
150 முதல் 200 கோடி ரூபாய் வரை கூடுதலாக தமிழக அரசுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதைவிட வேதனையான விஷயம் என்னவென்றால் தமிழகத்தின் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் ஐந்து சதவீத வரியை விதிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதுதான்.
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வாழ்நாள் வரிகளை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, அண்மையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள்,சரக்கு, வாடகை வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த வரி சராசரியாக 5 சதவீதமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 20 முதல்
25 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்னும் சிலர் இது 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை என்கிறார்கள்.
இந்த பெரும் சுமையை எப்படி தமிழக மக்கள் சுமக்க போகிறார்கள் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தன்பங்கிற்கும் திமுக அரசுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி தரும் இன்னொரு நூதன திட்டத்தை தீட்டி கொடுத்துள்ளார்.
நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக பதிவுத் துறை பிறப்பித்துள்ள புதிய உத்தரவின் மூலம் சென்னை, கோவை நகரங்களில் 10 சதவீதம் வரையும், மற்ற நகரங்களில் 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி இருப்பது தெரிகிறது.
மேலும் நெடுஞ்சாலை, விமான நிலையம், தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ள பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. அந்த பகுதிகளில் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்படும்.
பெரும்பாலான இடங்களில் நகர சாலைகள், தெருக்களில் வணிக ரீதியிலான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனால், வழிகாட்டி மதிப்புக்கான பட்டியலில், இந்த பகுதிகள் குடியிருப்பாகவே தொடர்கின்றன. அதனால், ஒவ்வொரு மண்டலத்திலும், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவரும், 10 ஆவணங்களில், சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீதுகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“எந்த வரி விதிப்பாக இருந்தாலும் சரி, கட்டண உயர்வு என்றாலும் சரி அதனால் பெரும் பாதிப்பை சந்திக்கப் போவதென்னவோ நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள்தான்” என்று சமூக நல ஆர்வலர்கள் மனம் குமுறுகின்றனர்.
“மதுபான விலை உயர்வால் பாதிக்கப்படுவது குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களும், அவர்களது குடும்பத்தினர் மட்டுமே. ஆனால்
ஆவின், நெய், வெண்ணை, பால் பொருட்களின் விலையை
பல மடங்கு உயர்த்தி இருப்பது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை பெரிதும் பாதிக்கும்.
அதேநேரம் வாகனங்களுக்கான வரி உயர்வு தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. கேட்டால்
15, 20 வருடங்களாக வாகன வரி உயர்த்தப்படவில்லை என்று திமுக அரசு காரணம் கூறுகிறது. அதற்காக ஒரே நேரத்தில் வாகனங்கள் வைத்திருப்போர் சுமக்க முடியாத அளவிற்கு அவர்கள் தலையின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பது சரியா? என்று தெரியவில்லை.
ஏனென்றால் தமிழகத்தில் ஓடும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3.75 கோடிக்கும் அதிகம். இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சுமார் 2 கோடியே 85 லட்சம் இருக்கலாம்.
இனி இவர்கள் அனைவருமே
பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஏனென்றால் போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் புதிய வாகன வரி விதிப்பின்படி கட்டணங்களை செலுத்தியதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்கிறார்களா?..
என்ற சோதனையில் தீவிரமாக இறங்குவார்கள். இது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி அனைத்து ரக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கும், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் தீராத தலைவலியாகவே அமையும்.
மேலும் இந்த வரி உயர்வு பொது போக்குவரத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் சாதாரண மற்றும் விளிம்பு நிலை மக்கள் பல மடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் அவல நிலைக்கும் கொண்டு போய்விடும்.
அதேபோல நிலத்தின் சந்தை வழி காட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதும்
நிலம் வாங்குவோரையும், ஏற்கனவே வாங்கியவர்களையும் கடும் சோதனைக்கு உள்ளாக்கும். புதிதாக வீடு கட்ட நினைப்போர் இனி சொந்த வீடே வேண்டாம், ஆளை விடுங்கப்பா! என்று ஓட்டம் பிடிக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம்.
தகுதியுள்ள ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக திமுக அரசு இந்தக் கட்டண உயர்வை அறிவித்திருப்பது போலத் தெரிகிறது. இத்திட்டத்திற்கு ஓராண்டுக்கு தேவைப்படும் மொத்த நிதியே 14 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் வரிவிதிப்பு, கட்டண உயர்வு ஆகியவற்றை பார்த்தால் அதைவிட மும்மடங்கு நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு 52 சதவீத மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு இது இன்னும் பெரிய சோதனையாகவே அமையும் என்பது நிச்சயம்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!