தமிழகத்தை கதற வைத்த கள்ளச்சாராயம்… 17 பேர் பலியால் திணறும் திமுக அரசு…!
Author: Babu Lakshmanan15 May 2023, 7:47 pm
டாஸ்மாக் மதுபான விற்பனையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராயம் முதல் முறையாக பலத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்த சோகம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரு வேறு கிராமங்களில் இந்த துயர நிகழ்வு நடந்திருப்பதுதான் மிகப்பெரிய சோகம்!
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்கும் பணியிலும், ஓய்வு நேரங்களில் விளையாட்டுப் போட்டிகளிலும் கவனம் செலுத்துவது உண்டு. சிலர் சிறிய படகுகளில் குறைந்த தூரம் சென்று மீன் பிடிப்பதும் வழக்கம்.
இந்த நிலையில்தான், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பம் என்னும் மீனவர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மதியம் 1 மணி அளவில் 75 பேர் தங்கள் பகுதியில் தாராளமாக கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் அத்தனை பேருமே கண்களில் எரிச்சல் ஏற்பட்டும், வாந்தி எடுத்தும் மயக்கம் போட்டு சுருண்டு விழுந்துள்ளனர். இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை, முண்டியம்பாக்கம், மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 12 மீனவர்கள் பரிதாபமாக பலியாகி விட்டனர். மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருக்கரணை கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த 15 பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் தங்களது இன்னுயிர்களை இழந்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களிலும் சிகிச்சை பெற்று வருவோரில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 25 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல் முறையாக கள்ளச்சாராயம் 17 உயிர்களை காவு வாங்கிய துயர நிகழ்வு அரங்கேறி உள்ளது.
இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த இரு தினங்களுக்கு முன்புதான், தமிழக காவல்துறை போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்ட 4.O என்னும் அதிரடி நடவடிக்கையை தொடங்கியது.
தவிர முதலமைச்சர் ஸ்டாலினும் காவல்துறை உயர் அதிகாரிகளை அவ்வப்போது அழைத்து போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியும் வருகிறார். அப்படி இருந்தும் கூட காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக இந்த கள்ளச்சாராய துயரம் நிகழ்ந்து விட்டது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்திருக்கிறார்.
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் தங்களது மாவட்டக்காரர்கள் என்பதால் அமைச்சர்கள் பொன்முடியும், செஞ்சி மஸ்தானும் புதுச்சேரி மருத்துவமனைகளுக்கே நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலியும் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, இச்சம்பவம் தொடர்பாக முந்தைய அதிமுக அரசை கடுமையாக சாடினார்.
“எதிர்கட்சித் தலைவர் இதெல்லாம் புதிதாக நடைபெறுவது போல தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கபட்டன; அதற்கு துணைபோன அமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தியது. இது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். போதைப் பொருள் விற்பனையை கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்துவிட்டு சென்றனர்” என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
அதேநேரம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அதிமுக சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கினார்.
காவல்துறையுடன் திமுகவினர் கை கோர்த்துக்கொண்டு செயல்படுவதால்தான் எக்கியார் குப்பத்தில் பெரும் துயரம் நடந்தது என்றும் அவர் திமுக அரசை கடுமையாக தாக்கினார்.
கள்ளச்சாராயம் காவு வாங்கிய துயரம் குறித்து, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டு உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது. இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், எனவே கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலினும், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலகவேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில்,” தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு முற்றிலும் நேர் எதிரான வகையில் மாநிலத்தில் அண்மைக்காலங்களில் கள்ளச்சாராய வணிகம் அதிகரித்து வருகிறது. இந்த விற்பனையை தடுக்க வேண்டியது திமுக அரசின் சட்டப்பூர்வ கடமை. அதற்காகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு நடைமுறை என்ற தனிப்பிரிவு காவல்துறையில் செயல்பட்டும் வருகிறது. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது. இந்த உயிரிழப்புகளுக்கு உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரும், மதுவிலக்கு நடைமுறைப் பிரிவினரும்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினார்.
அண்ணாமலை தனது பதிவில் “டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
அதேநேரம் மதுவிலக்கு துறையை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறாததும், இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிடாததும் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருவேளை, இந்த உயிர்ப்பலிகளுக்கு செந்தில் பாலாஜியும் ஒரு காரணம், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்பதால்
இந்த சம்பவம் குறித்து அவர் அமைதி காக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.
டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 முதல் 15 ரூபாய் வரை பெறப்படுவதாகவும், சட்ட விரோதமாக இயங்கும் மதுபார்களில் 50 முதல் 75 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலராலும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதனால் கையில் அதிக பணம் இல்லாதவர்கள் டாஸ்மாக்கை நாடாமல் கள்ளச்சாராயத்தை தேடி போகும் நிலை ஏற்படுகிறது என்கிறார்கள். மாநில முழுவதும் பல இடங்களில் அதிக அளவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என்ற பேச்சும் உள்ளது.
“குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களையும் கள்ளச்சாராயத்தையும் ஒழிப்பதற்காக திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் பொன்முடி என்னதான் விளக்கம் அளித்தாலும் அது திருப்தி அளிக்காத ஒன்றாகவே இருக்கிறது.
ஏனென்றால் முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த தவறுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் மக்கள் திமுகவை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் ஆட்சிக்கு வந்து 25 மாதங்கள் ஆன பிறகும் கூட பழைய பல்லவியை மீண்டும் மீண்டும் பாடுவது இது போன்ற பிரச்சினைகளில் தங்களது தோல்வியை திமுக அரசு ஒப்புக் கொள்வதுபோல்தான் பொன்முடி தெரிவித்த கருத்து நடுநிலையாளர்களால் பார்க்கப்படும்.
தவிர கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கூட கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு நிவாரணத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.
தவிர கள்ளச்சாராயத்தால் நாம் உயிரிழந்தால் திமுக அரசு நமது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எப்படியும் 10 லட்ச ரூபாய் கொடுத்து விடும். அதனால் நமது உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தைத்தான் விளிம்பு நிலையில் உள்ள மக்களிடம் அது ஏற்படுத்தும் அதனால் 20, 25 பேர் என கூட்டாக சேர்ந்து துணிச்சலுடன் கள்ளச்சாராயம் குடிக்கும் முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்பும் உள்ளது.
அதேநேரம் கள்ளச்சாராயத்திற்காக பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அளிக்கும்போது அளவுக்கு அதிகமாக டாஸ்மாக் மதுபானம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு எந்த நிவாரணமும் வழங்குவதில்லையே ஏன்? என்ற கேள்வியையும் டாஸ்மாக் மதுப் பிரியர்களிடம் தீவிரமாக எழுப்பும்.
மரக்காணம் சம்பவத்திற்கு அப்பகுதி திமுக நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் தங்களது அதிகாரம் மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் அதிகார பலம், பண பலம் மிக்கவர்களா? என்பதையெல்லாம் கண்டு அஞ்சாமல் கடும் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மதுவிலக்கு துறை போலீசார் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அவர்களின் கைகளை கட்டிப் போடக்கூடாது. அதேபோல சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாருக்கும் அந்த உரிமை தேவை. அப்போதுதான் குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினர் மீது மரியாதை ஏற்படும். பயமும் வரும். குற்றங்களும் வெகுவாக குறையும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.