விரைவில் நானும் சரளமாக தமிழ் பேசுவேன்… தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் நம்பிக்கை…!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 5:06 pm

உங்களைப் போல விரைவில் நானும் சரளமாக தமிழ் பேசுவேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு – அறச்சலூர் அருகே உள்ள ஓடா நிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

பின்னர் தீரன்சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, தீரன்சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர், தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு அவர் சான்றிதழ் வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது :- இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்பதில் பெருமையாக உள்ளது. நாட்டின் விடுதலைக்காக வாழ்வை இழந்தவர்களையும், ரத்தம் சிந்தியவர்களையும் ஒருபோதும் மறந்து விடக் கூடாது. தீரன் சின்னமலைக்கு நாம் நன்றி செலுத்தும் வகையில் சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

தமிழ் மிகவும் பழமையான, மிகவும் அழகான மொழி. தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன், எனக் கூறினார்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்