தமிழகத்திலும் வருகிறதா ஹிஜாப் அணிய தடை ..? பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள உடைகளை அணிய எதிர்ப்பு… பரபரப்பை கிளப்பிய மனு…!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 9:26 pm

சென்னை : தமிழக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஹிஜாப் உள்ளிட்ட உடைகளை அணிந்து வர அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், அரசின் உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ/மாணவிகள் ஹிஜாப் போன்ற மத அடையாள உடைகளை அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் பள்ளி மாணவ/மாணவிகளிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கலையக்கூடிய நோக்கில் 1960-ம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகள் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை, ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ/மாணவிகள் அணிந்து வருகின்றனர். இது சீருடை விதிகளுக்கு எதிரானது.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மை ஏற்படுவதை தடுக்கவும் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை போல தமிழகத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும். நாகரீகமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதனால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும், என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் 25ம் தேதி நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர பட்டியலிடப்பட்டுள்ளது.

  • anirudh music for village subject directing by tamizharasan pachaimuthu கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!