உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவிக்கும் கட்சி எது…? தனியார் நிறுவனத்தின் திடுக்கிடும் ‘சர்வே’.. அதிர்ச்சியில் திமுக…!!
Author: Babu Lakshmanan19 February 2022, 5:32 pm
கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த கறார் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று அண்மையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விறுவிறு வாக்குப்பதிவு
அதன்படி இரண்டு கோடியே 80 லட்சம் வாக்காளர்களை கொண்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் 12,601 பதவிகளுக்கு இன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது.
இதற்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் ஒரு லட்சம் போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆண்களும், பெண்களும் காலை 7 மணிக்கே உற்சாகத்துடன் திரண்டுவந்து வாக்களித்த விறுவிறு காட்சிகளையும் காணமுடிந்தது.
மாநிலம் முழுவதும் 5960 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டது. எனினும் பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்குவாதம், தள்ளுமுள்ளு கைகலப்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 முனைப் போட்டி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி – அதிமுக இடையே கடும் மோதல் நிலவுகிறது. மேலும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம், அமமுக ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் பெரும்பாலான வார்டுகளில் 9 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதன் பிறகு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இருந்தது போலவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகள் நீடிக்கின்றன.
என்றபோதிலும் ஒரு சில மாவட்டங்களில் எதிர்பார்த்த வார்டுகள் கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, முஸ்லிம்லீக் ஆகியவை திமுகவை எதிர்த்து துணிச்சலாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இதேபோல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட
திமுகவினர் சுயேச்சைகளாக களமிறங்கி இருக்கிறார்கள். அவர்கள் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவிலும் இதேபோல் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
கொட்டும் பரிசுமழை
அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக ஆகியவற்றின் ஒரு சில வேட்பாளர்களை திமுக அதிகார பலத்தின் மூலம் தன் கட்சிக்குள் வளைத்துப் போட்டுவிட்டது. செல்வாக்கு, பண வசதி கொண்ட சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவதால் இந்த தேர்தல் களைகட்டியுள்ளது.
கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக இவர்களும் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பணப்பட்டுவாடா, பெண் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கொலுசு, தங்க மூக்குத்தி பட்டுச் சேலைகள், ஸ்மார்ட் போன், ஹாட் பாக்ஸ், மிக்ஸி, வெட் கிரைண்டர் போன்றவையும் ஆண்களுக்கு விலையுயர்ந்த வேட்டி, சட்டை, செருப்பு உள்ளிட்டவையும் சிறப்பு கவனிப்புகளாக கிடைத்தன. இதேபோல் பல வார்டுகளில் சுயேச்சைகள் மிடுக்குடன் வலம் வந்த காட்சியையும் காண முடிந்தது.
நகைக்கடன் தள்ளுபடி எங்கே..?
இது ஒரு புறமிருக்க இந்த தேர்தலில் ஆண், பெண் வாக்காளர்களிடம் ஒரு துணிச்சலும் தென்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போ கொடுப்பீங்க?… 5 பவுன் நகை கடன் தள்ளுபடின்னு சொன்னீங்க… ஆனா வாக்குறுதி கொடுத்த மாதிரி எங்களுக்கு எதுவும் நடக்கல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப அதற்கு சரியான பதிலை சொல்ல முடியாமல் உதயநிதி திண்டாடித்தான் போனார்.
அதுமட்டுமின்றி திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பியிடமும் இதே கேள்விகளை சில பெண்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்று கூட பார்க்காமல் தைரியத்துடன் கேட்டனர்.
இவர்கள் இருவரும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தபோது, திமுகவின் இந்த வாக்குறுதிகளைச் சொல்லித்தான் ஓட்டு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்யாமல் திறந்த வேன் மூலம் சென்று வாக்கு சேகரித்திருந்தால் அவரிடமும் இப்படித்தான் சரமாரியாக பெண்கள் கேள்வி எழுப்பி இருப்பார்கள் போலிருக்கிறது.
ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவதாக அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என்பதால் பெண்களின் வாக்கு முன்புபோல் இந்த தேர்தலில் கிடைக்குமா?… என்ற சந்தேகம் எழுந்ததால்தான் என்னவோ ஸ்டாலின் விரைவில் இத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார், என்கிறார்கள்.
வெற்றி கிடைக்குமா..?
அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒரு தனியார் அமைப்பு எடுத்த சர்வேயில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்தவர்களில் 21 சதவீதம் பேர் இம்முறை வாக்களிக்க ஆர்வத்துடன் இல்லை என்பது பெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சர்வே உண்மையாக இருக்கும் பட்சத்தில், திமுக கூட்டணியால் கடந்த அக்டோபர் மாதம் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த 90 சதவீத வெற்றியை பெறுவது கடினம்.
திமுகவுக்கு சறுக்கல்
இதுபற்றி அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “திமுகவின் கடந்த 9 மாத கால ஆட்சியில் முதல் நான்கு மாதங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் மீதான மதிப்பு மக்களிடம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சென்னையிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும், மழை நீரில் மூழ்கிப்போன பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காத விவசாயிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதுமட்டுமன்றி கடந்தஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அதிமுக அரசு வழங்கிய 2500 ரூபாய் பரிசுப் பணம் திமுக ஆட்சியில் கொடுக்கப்படவில்லையே என்ற கவலையும் பரவலாக மக்களிடம் காணப்படுகிறது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டதில் பல பொருட்கள் தரமில்லாதவை என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்கு பதிலாக ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று மக்கள் கருதும் அளவிற்கு நிலைமை மாறிப்போனது.
தமிழக மக்களின் இந்த வேதனையை உணர்ந்து கொண்ட அதிமுக, பாஜக,
நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக போன்ற பல கட்சிகள் இதையொரு முக்கிய ஊழல் குற்றச்சாட்டாக திமுக அரசு மீது சுமத்தி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரச்சாரமும் செய்தன.
அதுவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தான் பிரச்சாரம் செய்த அத்தனை ஊர்களிலும் திமுக அரசில் நடந்ததாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகளை விரிவாகப் பேசி திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இந்த தொடர் பிரசாரம் வாக்காளர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். இது தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
ஏனென்றால் திமுக கூட்டணி கட்சிகளால் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை அளிக்க முடியவில்லை. அதேநேரம் திமுக கூட்டணி முழுமையாக அப்படியே இருப்பதால் கூட்டணி கட்சிகளின் ஓட்டுகள் தங்களுக்கு அப்படியே கிடைத்தால் கூட போதும் 90 சதவீத இடங்களை கைப்பற்றி விடலாம் என்று
திமுக கணக்கு போடுகிறது.
குறிப்பாக சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மாநகராட்சிகளை கைப்பற்றி விடவேண்டும் என்று திமுக வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தும் உள்ளது. இந்த மாநகராட்சிகளில் வெற்றி பெறுவோம் என்று அதிமுகவும், பாஜகவும் மிகுந்த நம்பிக்கையில் உள்ளன.
சுயேச்சைகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இழுபறி ஏற்படும் நகராட்சிகளில் சுயேச்சைகளுக்கு நல்ல மரியாதையும், விலையும் உண்டு.
எது எப்படி இருந்தாலும் பதிவான ஓட்டுகள் வரும் 22-ம் தேதி எண்ணி முடிக்கப்படும்போதுதான் எந்தக் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றும், மாநகராட்சி மேயர் பதவிகளை பிடிக்கும் என்பது தெரியவரும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.
0
0