தமிழகத்தில் தொடரும் விசாரணைக் கைதிகளின் மர்ம மரணம்… ‘வாய்ஸ்’ கொடுப்பாரா நடிகர் சூர்யா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி!
Author: Babu Lakshmanan29 April 2022, 6:25 pm
பிரபல சமூக ஆர்வலரும், மருத்துவரும், விளையாட்டு வர்ணனையாளருமான சுமந்த்
சி ராமன் மாநிலத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு மனக்குமுறலை வெளிப்படுத்துவது வழக்கம்.
நடிகர் சூர்யா :
அதுபோல அவர் நடிகர் சூர்யாவுக்கு சூடாக கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ள, ஒரு செய்திதான் தற்போது தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
2020-ம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீதி நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோம் # Justice For Jayaraj and Bennicks” என்று கொந்தளித்து புரட்சி வாய்ஸ் எழுப்பியிருந்தார். அப்போது சூர்யா வெளியிட்ட கண்டன அறிக்கையை தற்போது தன் ட்விட்டர் பதிவுடன் இணைத்து சுமந்த் சி ராமன் அவருக்கு நினைவூட்டி உள்ளார்.
மேலும், “இந்தச் சமூகநீதிப் போராளிக்கு யாராவது சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் யார் என்பதைத் தெரிவிக்கவும். இவர்களுக்கு நீதியும் வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
சுமந்த் சி ராமன் குறிப்பிட்ட இந்த நான்கு பேருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது. இவர்கள் அனைவரும் விசாரணை கைதிகளாக இருந்த போது,போலீசாரின் கொடூர தாக்குதலால் சிறையிலும் காவல் நிலையத்திலும் மரணத்தைத் தழுவியவர்கள் என்று கூறப்படுவதுதான், அது. கடந்த 11 மாதங்களில் இந்த 4 வேதனை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
நிகழ்வு -1
திமுக அரசு பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் சேலம் மாவட்டம் இடையபட்டியில் நடந்த கொடூரம், அது. அந்த ஊரை சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவர் குடிபோதையில் தனது இரு நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் ஒருவர், தான் வைத்திருந்த லத்தியால் முருகேசனை தாக்க அவர் படுகாயமடைந்தார். பின்னர் சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதவி ஆய்வாளர் லத்தியால் தாக்கியதை முருகேசனின் இன்னொரு நண்பர் செல்போனில் வீடியோவாக படம்பிடித்து அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துத்தான் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நிகழ்வு-2
கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே திடீரென்று இறந்து போனார்.
விசாரணையின்போது போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால்தான் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம் அடைந்தார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சேந்தமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என 3 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நிகழ்வு-3
சென்னை கெல்லீஸ் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு போலீசாரின் வாகனச் சோதனையின்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கடற்கரையில் குதிரை ஓட்டும் தொழிலாளியான பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், காவல்துறையினரின் சித்ரவதை காரணமாக மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் வலிப்பு நோயால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இறந்துபோன விக்னேஷின் உடலை யாருக்கும் தெரியாமல் போலீசாரே தகனம் செய்ததாக கூறப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிகழ்வு-4
திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தில் வசித்து வந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி கடந்த 26-ம் தேதி காலை திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையிலும் அடைத்தனர்.
இந்நிலையில் அவருக்கு வலிப்பு நோய் வந்ததால் இறந்து விட்டதாக கூறி உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் இந்த மரணம் குறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்தனர்.
மவுனம் ஏன்..?
திமுக ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில், இப்படி விசாரணைக் கைதிகள் நான்கு பேர் மர்மமான முறையில் மரணமடைந்ததாக கூறப்படும் விவகாரம் பற்றி
தன்னை புரட்சி போராளி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நடிகர் சூர்யா ஏன் குரல் கொடுக்கவில்லை?…என்ற கேள்வியைத்தான் சமூக ஆர்வலர் சுமந்த் சி ராமன் எழுப்பியிருக்கிறார்.
அதில் சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்று தந்தையும் மகனும் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, கொதித்தெழுந்த நீங்கள், தற்போது 4 விசாரணைக் கைதிகள் மர்ம மரண விவகாரத்தில் ஏன் மௌனமாகி விட்டீர்கள்?… இதுதான் உங்கள் சமூக நீதியா?… உங்களை சமூக, புரட்சி போராளி என்று அழைத்துக் கொள்வதெல்லாம் பகல் வேஷம்தானா?… என்னும் கிடுக்குப் பிடி கேள்விகளும் எழுகின்றன.
சரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக போராளி சூர்யா அப்படி என்னதான் சொன்னார்?… அவருடைய கொந்தளிப்பு இதுதான்.
“சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது.
போலீசாரால் கொடூரமாக தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து நலமாக இருப்பதாக சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல் இயந்திர கதியில் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால் போலீசாரின் இந்த கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும்.
இந்த கொடூர மரணத்தில் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது.
இனிமேலும் இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை, அரசும் நீதிமன்றமும் பொறுப்புமிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றமிழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். அன்புடன் சூர்யா”எனக் கூறியிருந்தார்.
மனவேதனை
“கடந்த ஆட்சி காலத்தில் இப்படியெல்லாம் பொங்கி எழுந்த நடிகர் சூர்யா, கடந்த ஒரே ஆண்டில் நான்கு விசாரணைக் கைதிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியும் கூட தற்போது சைலன்ட் மோடில் பதுங்கிக் கொண்டிருப்பதுதான் எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. புரட்சி போராளி சூர்யா அன்று சொன்னது இன்றைக்கும் பொருந்தும்தானே?…”என்று சமூக நல விரும்பிகளும் அரசியல் ஆர்வலர்களும் அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
0
0