திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2024, 8:01 pm

தமிழகத்தில் பெய்து வரும் மழை குறித்து தமிழக அரசின் முன்னேற்பாடுகள் குறித்து ஒரு வரி கூட பேசாமல் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வடகிழக்கு பருவமழை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X தளப்பக்கத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக, கடந்த ஆண்டுகளில், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தமிழக அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% அளவு நிறைவு பெற்றிருப்பதாக, அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வருவதால், கடந்த ஆண்டுகளை நினைவில் கொண்டு, தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் படிக்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மின்சாரம் தொடர்பான பொருள்களைக் கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 332

    0

    0