அதிமுக கூட்டணியில் இணைய முடிவா?… இரட்டை வேடம் போடும் திருமாவளவன்…?
Author: Babu Lakshmanan9 March 2023, 6:20 pm
விடுதலை சிறுத்தைகள்கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கலாமா?… வேண்டாமா?…என்ற பெரும் குழப்பத்தில் இருப்பதை அவருடைய சமீப கால பேச்சுக்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதுபோன்ற ஊசலாட்ட நிலைக்கு அவர் தள்ளப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பட்டியலின மக்களுக்கு திமுக ஆட்சியில் உரிய சமூக நீதி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமாக இருக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே? மாறாக இந்த இழிவான நிகழ்வை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பட்டியலின இளைஞர்களையே தமிழக போலீசார் குற்றவாளிகளாக்க முயற்சிப்பதாக கூறப்படுவதையும் திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்தும் கூட இதை தன்னால் பகிரங்கமாக கண்டிக்க முடியவில்லையே?… இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்துப் பேசிய பின்பும் கூட எதுவும் நடக்கவில்லையே?…என்று திருமாவளவன் மனதுக்குள் வேதனையுடன் கொந்தளிக்கும் நிலைதான் காணப்படுகிறது.
தவிர அவர் சார்ந்த சமூக இளைஞர்கள் போகும் இடங்களில் எல்லாம் நமது கட்சி இதற்காக மாநிலம் முழுவதும் பெரும் போராட்டத்தில் குதிக்காதது ஏன்?…சேலம், மோரூரில் விசிக கொடியை ஏற்ற விடாமல் தடுத்ததற்காக நாம் மிகப்பெரிய போராட்டத்தை திமுக அரசின் காவல் துறைக்கு எதிராக பல நகரங்களில் நடத்தினோமே?…இப்போது மட்டும் ஏன் மௌனமாக இருக்கவேண்டும்?… என்று சரமாரியாக கிடுக்குபிடி கேள்விகளை திருமாவளவனிடம் கேட்பதாக பரவலாக செய்திகள் வெளிவருகிறது.
ஏற்கனவே சனாதனத்தை எதிர்த்தும் மத்திய பாஜக அரசுக்கும் எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும், தான் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி வாய் திறக்காமல் விட்டுவிட்டால் ஒரு ஏளனப் பொருளாகி விடுவோமோ,
தன் மீதான நம்பகத்தன்மை குறைந்து கட்சியின் செல்வாக்கை இழக்கச் செய்து விடுமோ?என்ற பயம் திருமாவளவனுக்கு வந்திருப்பதை இதன் மூலம் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.
எனவேதான் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது போல திருமாவளவன் அண்மைக்காலமாக போக்கு காட்டியும் வருகிறார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோது, “எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிகுந்த ஒரு தலைவர். பாஜக இல்லாமல் வரும் தேர்தலை சந்தித்தால்தான் அதிமுகவுக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது.
ஏனென்றால் தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக வளர்ந்து வருகிறது. எனவே பாஜகவை அதிமுக தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அடுத்த சில நாட்களிலேயே, பாஜகவும், பாமகவும் இருக்கும் கூட்டணியில் தனது கட்சி ஒருபோதும் இடம் பெறாது என்று தடாலடியாக அறிவிக்கவும் செய்தார். இது பாமகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்த திமுக தலைமைக்கு செக் வைப்பது போல அமைந்து விட்டது.
அதேநேரம் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டு விட்டால் மார்க்சிஸ்ட்டை அழைத்துக் கொண்டு அதிமுக அணியில் விசிக ஐக்கியமாகிவிடும் என்ற செய்திகளும் தமிழக அரசியலில் உலா வர ஆரம்பித்தன.
இந்த நிலையில்தான் மேல்மருவத்தூரில் நடந்த விசிக பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து விசிக போட்டியிடாது என்பதை உறுதி செய்து இருக்கிறார்.
அவர் பேசும்போது, ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், அம்பேத்கர் வழியை பின்பற்ற அமைப்பாய் திரள்வோம். சேரிப் பகுதிகளில் பாரதிய ஜனதா உள்ளே நுழைய பார்க்கிறது. அவர்களை கட்சி கொடியேற்ற ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். அதிமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு நான் ஆலோசகர் இல்லை, ஆனால் அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்ய நினைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும். திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக அணியில் சேர உள்ளதாக சிலர் நெருப்பை அள்ளி வீசுகிறார்கள். இது தவறான செய்தி. இதை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.
எதனால் இந்த திடீர் மனமாற்றம்?…
“திருமாவளவன் இப்போது ஒரு கை தேர்ந்த அரசியல் கட்சியின் தலைவர் போல் மாறிவிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப காய்களை எப்படி நகர்த்தவேண்டும் என்பதையும் நன்றாக கற்றுக்கொண்டு விட்டார். அதை அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே முழுமையாக ஓங்கி இருப்பதை திருமாவளவன் வெளிப்படையாகவே அங்கீகரிக்கிறார். என்னை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் நான் அதிமுக அணியில் இணைய தயங்க மாட்டேன் என்பதை மறைமுகமாக அறிவாலயத்துக்கு சொல்கிறார். அதேநேரம் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜகவை ஒதுக்கி வையுங்கள் என்று அட்வைஸ்சும் செய்கிறார். ஆனால் இதை அவர் மனப்பூர்வமாக சொல்கிறாரா என்பதைத்தான் நம்ப முடியவில்லை.
அதிமுக-பாஜக கூட்டணியை முறித்துவிட்டால் 2024 தேர்தலில் கடுமையான போட்டி ஏற்படுவதை தடுத்து திமுக கூட்டணியை 39 இடங்களிலும் தமிழகத்தில் அபார வெற்றி பெற வைத்து விடலாம் என்ற உள்நோக்கத்துடன் இதுபோல் சிண்டு முடியும் வேளையில் திருமாவளவன் இறங்கி இருக்கவும் வாய்ப்புண்டு.
அதேசமயம் பாமக வந்தால் திமுக கூட்டணியில் நீடிக்க மாட்டேன் என்றும் சொல்கிறார். ஆனால் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும் விசிகவும் இடம் பெற்றிருந்தன. பிறகு எதற்காக பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்று இப்போது திருமாவளவன் கூற வேண்டும்?… இங்கேதான் அவர் சதுரங்க வேட்டை ஆடுகிறார். பாமகவை வரவழைத்து கூட்டணியை பலப்படுத்தும்போது தனது கட்சிக்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கவேண்டும் என்ற நிபந்தனையை திருமாவளவன் விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அறிவாலயமோ 2019 தேர்தல் போல உங்கள் கட்சிக்கு இரண்டு சீட்டுகள் உண்டு. ஆனால் ஒரு தொகுதியில் திமுக சின்னத்தில் உங்கள் கட்சி போட்டியிடவேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டது என்கிறார்கள். நீங்களும் திமுக சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றால் மத்தியில் எதிர்க்கட்சிகள் கூட்டணி
ஆட்சி அமைக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி பெற்று தந்து விடுகிறோம் என்று உறுதி கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இதனால் மனம் குளிர்ந்ததாக கூறப்படும் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் நான் சேர இருப்பதாக சிலர் நெருப்பை அள்ளி வீசுகிறார்கள் என்று இப்போது கொந்தளித்து பேசுகிறாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
மேலும் இரு தினங்களுக்கு முன்பு திருமாவளவன் பேசும் போது சனாதன சக்தியை வீழ்த்த, ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முதலமைச்சர் ஸ்டாலின் வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகளை எல்லாம் சந்தித்து பேச வேண்டும் என வேண்டுகோள் வைத்ததும் இதை மனதில் கொண்டுதானோ என கருதவும் தோன்றுகிறது.
எது எப்படியோ எம்பி தொகுதிகளை பெறுவதில் திமுகவுடன் பேரம் பேசுவதற்காக அதிமுக ஆதரவு என்னும் நாடகத்தை திருமாவளவன் நடத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்” என அந்த அரசியல்
விமர்சகர்கள் கூறுகின்றனர்.