வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பேசிய காங்., எம்எல்ஏ… பேசாமல் உட்காருமாறு கூறிய சபாநாயகர் அப்பாவு… வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan7 April 2022, 11:28 pm
கடந்த அதிமுக ஆட்சியின் போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இதனை விசாரித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என அதிரடி ஆணையை பிறப்பித்தது. திமுக அரசின் மெத்தனப் போக்கே இடஒதுக்கீடு ரத்தானதற்கு காரணம் என்று எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
இந்த சூழலில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்த விவாதம் நடைபெற்றது. தரவுகள் எதுவும் இல்லாமல், அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதாலேயே உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, போதிய ஆதாரங்களை திமுக அரசு சமர்பிக்க தவறிவிட்டதாகவும், முறையாக வாதாடவில்லை என்றும் கூறினார்.
இதனிடையே, சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை உரை நிகழ்த்தினார். அப்போது, 1952ல் சமூக நீதிக்காக மாணிக்கவேல் நாய்க்கர் மற்றும் ராமசாமி படையாட்சி ஆகியோர் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டு பேசினார். அப்போது, சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகையை அமருமாறு ஆணையிட்டார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணிக்கவேல் நாய்க்கர் மற்றும் ராமசாமி படையாட்சி ஆகியோரை பற்றி செல்வப்பெருந்தகை பேசினால், சபாநாயகர் அப்பாவு ஏன்.. கோபப்படுகிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதேவேளையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்திருக்கிறார் என்றும பேசப்பட்டு வருகிறது.
0
0