கார் விபத்தில் பலியான தமிழக இளம் வீரருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்… ரூ.10 லட்சம் நிவாரணத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
Author: Babu Lakshmanan18 April 2022, 12:00 pm
மேகாலயாவில் நடக்கும் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கச் சென்ற போது, நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேகாலயாவில் 83வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதில், பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் மேகாலயா வந்தடைந்தனர். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இருந்து இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது சாலையின் எதிரே வந்த லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மற்றும் எஞ்சிய 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார் ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கார் விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றபோது கார் விபத்தில் தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் உயிரிழந்த தீனதயாளன் விஷ்வாவின் மறைவுக்கு அனைத்து உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், தீனதயாளனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவதாக அறிவிக்கப்பட்டது.
0
0