‘கரூர் கம்பெனி’ குறித்து அமைச்சர் பேசாதது ஏன்..? டாஸ்மாக் முறைகேடு குறித்து விவாதிக்க தயாரா..? டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சவால்

Author: Babu Lakshmanan
31 March 2023, 6:25 pm

டாஸ்மாக்‌ செயல்பாடுகள்‌ குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தொழிற்சங்கங்கள் தயார் என்றும், அமைச்சர் தயாரா..? என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சவால் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ 27.03.2023 அன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.பி.தங்கமணி அவர்கள்‌ டாஸ்மாக்‌ வருமானம்‌ முழுமையாக அரசுக்கு வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நீதித்துறை அமைச்சர்‌ திரு.பி.டி.பழனிவேல்‌ தியாகராஜன்‌ அவர்கள்‌ முழுமையாக வருகிறதா என்று கேட்டால்‌ என்னால்‌ சொல்ல முடியவில்லை. ஏனென்றால்‌ விற்பனைக்கு இடையே ஒரு பாட்டில்‌ காணாமல்‌ போகாத அளவுக்கு கம்யூட்டர்‌ சிஸ்டம்‌ இருந்திருந்தால்‌ என்னால்‌ சொல்ல முடியும்‌ என்று கூறியுள்ளார்‌.

தொழிற்சங்கங்களும்‌ கேரளாவை போல அனைத்து டாஸ்மாக்‌ கடைகளையும்‌ கணினிமயப்படுத்தி கேஷ்‌ கவுண்டா்‌-சேல்ஸ்‌ கவுண்டர்‌ என நிர்வாகத்தை முறைப்படுத்தி அனைத்து வாடிக்கையாளருக்கும்‌ பார்‌ கோடிங்‌ பில்லிங்‌ முறை நடைமுறைப்படுத்த வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால்‌ அதை பற்றி கொஞ்சமும்‌ அக்கறையற்றவராக தான்‌ மாண்புமிகு துறை அமைச்சர்‌ இருந்து வருகிறார்‌.

நாளொன்றுக்கு சுமார்‌ 120 கோடி ரூபாய்‌ பணபரிவர்த்தனை நடக்கும்‌ மிக பெரிய நிறுவனமான டாஸ்மாக்கில்‌ கணினிமயப்படுத்துவதற்கு சில நூறு கோடி ரூபாய்‌ செலவு செய்து நவீனப்படுத்திட முறைப்படுத்திட ஆக்கப்பூர்வமான ‌ மனமில்லாமல்‌ நிதியமைச்சர்‌ முந்தைய ஆட்சியை குறை கூறுவதால்‌ மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. 2006-2011 ஐந்தாண்டு திமுக ஆட்சியிலும்‌ இருந்த குறை இருந்தது. மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில்‌ டாஸ்மாக்‌ நிறுவனத்தின்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ குறித்தான குறிப்பில்‌ தமிழ்நாடு அரசின்‌ கொள்கைக்‌ குறிப்புகள்‌ 2003-04, 2008-07 மற்றும்‌ 2007-08 ஆகியவற்றில்‌ மதுபாட்டில்கள்‌ மற்றும்‌ வெளிப்புற அட்டைப்பெட்டிகள்‌ மீது பார்‌ குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த முன்மொழிவுகள்‌ இருந்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால்‌ அமல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்‌ மது உற்பத்தி ஆலைகளிலிருந்து கொள்முதல்‌ தொடங்கி டாஸ்மாக்‌ கிடங்கு வரை மற்றும்‌ கிடங்குகளிலிருந்து டாஸ்மாக்‌ கடைகள்‌ வரை சரக்கு மேலாண்மையை எளிதாக்குதல்‌, கடைகளில்‌ பில்லிங்‌ செய்தல்‌, விற்பனை மற்லும்‌ சரக்கு இறுப்பு சரியான கணக்கு முறையாகவும், வெளிப்படையாகவும்‌ பராமரிக்கவும்‌ கணினிமயப்படுத்துதல்‌ உதவி செய்யும், ஆனால்‌ டாஸ்மாக்‌ நிர்வாகம்‌ பார்‌ கோடிங்‌ முறைக்கு மாறாக எலட்ரானிக்‌ பில்லிங்‌ முறையை நடைமுறைப்படுத்தியது. அதுவும்‌ 2500 கருவிகளை மட்டுமே வாங்கப்பட்டு அதுவும்‌ தற்போது பயன்படுத்த முடியாத நிலையில்‌ உள்ளன. ஆக டாஸ்மாக்‌ நிறுவனத்தில்‌ மது விற்பனையை நவீனப்படுத்துவதற்கு எந்த அரசும்‌ முனைப்பு காட்டப்படவில்லை என்பதே உண்மை.

மாண்புமிகு. நிதியமைச்சர்‌ விளக்கத்திற்கு பிறகு மாண்புமிகு.துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி அவர்கள்‌ சில கருத்துகளை அவையில்‌ பதிவு செய்துள்ளார்‌. அதில்‌ அவையில்‌ எழுந்த வினாவிற்கு சம்பந்தமில்லாமல்‌ டாஸ்மாக்‌ கடைகளில்‌ அதிகமாக விலையில்‌ விற்பனை செய்பவர்கள்‌ 1952 பேர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 5 கோடி அளவிற்கு அபராதம்‌ வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்‌. இது போன்று கூடுதல்‌ விலை விற்பவர்கள்‌ மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கிற போது சட்ட சிக்கல்‌ ஏற்படுவதாகவும்‌, தொழிற்சங்கங்கள்‌ உள்ளே போராட்டங்களை நடத்துகிறார்கள்‌ என்று தொழிற்சங்கங்கள்‌ மீது பழிபோட்டுவிட்டு டாஸ்மாக்‌ நிர்வாகம்‌ நேர்த்தியாக நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்‌. அமைச்சரது குற்றச்சாட்டு பொத்தாம்‌ பொதுவாக தொழிற்சங்கங்கள்‌ என்று கூறுவது ஏற்புடையதல்ல. எந்த சங்கம்‌ இது போன்று தவறு செய்பவர்களுக்கு துணை நிற்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்‌.

மேலும்‌ எந்தவொரு தொழிற்சங்கமும்‌ வாடிக்கையாளர்களிடம் கூடுதல்‌ விலை வைத்து விற்பனை செய்யுங்கள்‌ என்று ஊழியர்களிடத்தில்‌ சொல்லவில்லை. அத்தகைய போக்கை ஆதரிக்கவும்‌ இல்லை.

அமைச்சர்‌ கூறியுள்ளபடி கூடுதல்‌ விலை விற்பனை செய்ததற்காக 1952 பேர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உண்மையென்றால்‌, அவர்களிடமிருந்து அபராதம்‌ வசூலிக்கப்பட்ட பிறகும்‌, பணியிடை நீக்கம்‌, பணியிடமாறுதல்‌ செய்த பிறகும்‌ அந்த ஊழியர்கள்‌ அந்த தவறை செய்யாமல்‌ இருக்கிறார்களா? அவர்கள்‌ பணிபுரியும்‌ கடையில்‌ நிர்ணயிக்கப்பட்ட விலையில்‌ தான்‌ விற்பனை செய்யப்படுகிறதா? அதற்கான தொடர்‌ கண்காணிப்பு குறித்து அமைச்சர்‌ கூறியிருந்தால்‌ டாஸ்மாக்‌ நிர்வாகம்‌ நேர்த்தியாக செயல்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்‌.

கூடுதல்‌ விலை விற்பனையானது மாநிலம்‌ முழுவதுமுள்ள அனைத்து டாஸ்மாக்‌ கடைகளிலும்‌ தினசரி நடந்து கொண்டு தான்‌ இருக்கிறது. டாஸ்மாக்‌ நிர்வாகம்‌ தலைமை அலுவலை பறக்கும்படை, மண்டல பறக்கும்‌ படை என பல ஆய்வு படைகளை கடைகளுக்கு அனுப்பி ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆய்வுகளின்‌ போது கண்டறியப்படுவதாக கூறப்படும்‌ குறைபாடுகள்‌, தவறுகள்‌ மீது சட்டரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை முறையாக எடுக்கப்பட்டிருந்தால்‌ இத்தகைய முறையற்ற செயலை தடுத்திருக்க முடியும்‌. மாறாக ஆய்வு அலுவலர்கள்‌ தவறை சுட்டிக்காட்டி பணம்‌ வசூலிப்பதும்‌, பணம்‌ கொடுக்க மறுப்பவர்களை பழிவாங்கும்‌ நடவடிக்கையிலும்‌ ஈடுபட்டு வருவதும்‌ துறை அமைச்சருக்கு தெரியாததல்ல.

மேலும்,‌ டாஸ்மாக்‌ கடைகளில்‌ உள்ள ஆய்வு பதிவேடுகளில்‌ குறைபாடுகளை பதிவு செய்யாமல்‌ தயார்‌ செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்படாத தாளை கொண்டு குறைபாடுகளை பதிவு செய்வது ஏன்‌? துறை அமைச்சராக இரண்டு காலமாக இருக்கும்‌ திரு.செந்தில்‌ பாலாஜி அவர்கள்‌ டாஸ்மாக்‌ தலைமை அலுவலகத்திற்கு அருகில்‌ உள்ள கடைகளில்‌ கூட நிர்ணயிக்கப்பட்ட விலையில்‌ மதுபானங்கள்‌ விற்பனையை உறுதி செய்திட முடியவில்லை என்பதே யாதார்த்தம்‌.

நோய்நாடி நோய்முதல்‌ நாடி அதுதணிக்கும்‌
வாய்நாடி வாய்ப்பச்‌ செயல்‌. (வள்ளுவன்‌ குறள்‌)

உடல்‌ நோய்க்கு மட்டுமின்றிச்‌ சமுதாய நோய்க்கும்‌ இந்த திருக்குறள்‌ பொருந்தும்‌ என்று மறைந்த முன்னாள்‌ முதலமைச்சரும்‌, முன்னாள்‌ திமுக தலைவருமான கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்கள்‌ குறிப்பிட்டதை அவரது கட்சியை சார்ந்த அமைச்சருக்கு நினைவுப்படுத்துகிறோம்.

கூடுதல்‌ விலை வைத்து விற்பனை செய்ய வேண்டிய தேவை அந்த ஊழியர்களுக்கு ஏன்‌ ஏற்பட்டது. அவர்களது பணிக்கேற்ப நியாயமான சட்டப்படியான ஊதியம்‌ வழங்கப்படுகிறதா? சட்ட சலுகைகள்‌ வழங்கப்படுகிறது? தவறு செய்தால்‌ தண்டனை கிடைக்கும்‌ என்ற நிலையில்‌ அந்த தவறை தொடர்ந்து செய்கிறார்கள்‌ என்றால்‌ அதற்கு டாஸ்மாக்‌ அதிகாரிகள்‌ தான்‌ பொறுப்பேற்க வேண்டும்‌. டாஸ்மாக்கில்‌ எந்தவொரு தவறு செய்தாலும்‌ தவறுக்கேற்ப கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டால்‌ தண்டனையிலிருந்து தப்பித்துகொள்ளலாம்‌ என்ற மனநிலையை உருவாக்கியவர்கள்‌ டாஸ்மாக் அதிகாரிகள்‌ தான்‌. டாஸ்மாக்‌ நிறுவனத்தில்‌ நடக்கும்‌ தவறுக்கெல்லாம்‌ ஊழியர்கள்‌ தான்‌ காரணம்‌ என்று அமைச்சர்‌ கூறுவது தவறை செய்ய தூண்டும்‌ அதிகாரிகளுக்கு துணை நிற்கும்‌ செயலாகும்‌.

டாஸ்மாக்‌ கடைகளுக்கு வரும்‌ பெரும்பான்மையான வாடிக்கையாளா்கள்‌ அன்றாடம்‌ கூலி வேலை செய்து அதன்‌ மூலம்‌ வரும்‌ கூலியை வீட்டிற்கு கொண்டு போகாமல்‌ நேராக டாஸ்மாக்‌ கடைக்கு வந்து மது வாங்கி குடிப்பவர்கள்‌ தான்‌. இந்த உடலுழைப்புத் தொழிலாளிகளிடம்‌ கூடுதல்‌ விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது என்று தொழிற்சங்கங்கள்‌ ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றன.

அதே நேரத்தில்‌ ஊழியர்கள்‌ தரப்பில்‌ மாவட்ட மேலாளருக்கு மாமூல்‌, மண்டல மேலாளருக்கு மாமூல், கரூர்‌ கம்பெனிக்கு மாமூல்‌ என மாமூல்‌ கொடுப்பது எழுதப்படாத விதி உருவாக்கப்பட்டு விட்டது. குறிப்பிட்ட தேதியில்‌ மாமூல்‌ சேரவில்லையென்றால்‌ அந்த கடை ஊழியர்கள்‌ மீது நடவடிக்கை பாயும்‌. இதற்கு மேல்‌ கடையில்‌ ஏற்படும்‌ பாட்டில்கள்‌ உடைப்பு, சரக்கு வண்டியில்‌ திருட்டு இழப்புகள்‌, சரக்கு இறக்குக்கூலி, மின்சார கட்டணத்தில்‌ ஒரு பகுதி, கடை வாடகையில்‌ ஒரு பகுதி, காலி அட்டை பெட்டி விற்பனையில்‌ ஏற்படும்‌ குறைவு என பலவிதமான ஏற்பாடுகள்‌ இந்த கூடுதல்‌ விலை விற்பனையில்‌ உள்ளதை அமைச்சரது கவனத்திற்கு இதுநாள்‌ வரை வராமல்‌ இருக்க முடியுமா?

“பிச்சை எடுத்தானாம்‌ பெருமாளு. அதை புடுங்கி தின்னானாம்‌ அனுமாரு’ என்ற பழமொழி டாஸ்மாக்கிற்கு பொருந்தும்‌. ஒரு அனுமாரு இல்ல… பல ரூபத்துல அனுமாருகள்‌ ஊழியர்களிடம்‌ பிடுங்கி தின்னு வருவதை மாண்புமிகு. அமைச்சர்‌ அறியாததல்ல

கடந்த ஆறுமாத காலமாக டாஸ்மாக்‌ கடைகளில்‌ விற்பனையாகும்‌ பாட்டில்கள்‌ அடிப்படையில்‌ விற்பனை அடிப்படையில்‌ கரூர்‌ கம்பனி என்ற பெயரில்‌ தினசரி மாமூல்‌ வசூலிக்கும்‌ கும்பல்‌ குறித்தும்‌, மதுக்கூடம்‌ உரிமம்‌ டெண்டர்‌, சரக்கு போக்குவரத்து டெண்டர்‌ போன்றவற்றில்‌ அமைச்சரது பெயர்‌ அடிபடுவது குறித்தும்‌ சட்டப்பேரவையில்‌ துறை அமைச்சர்‌ தன்னிலை விளக்கம்‌ அளிப்பாரா ?

தொழிற்சங்கங்கள்‌ மீது பழிபோட்டு தன்‌ தரப்பு தவறுகளை மூடி மறைக்க முயலுவது முழு பூசணிக்காயை சோற்றில்‌ மறைக்க முயலுவதற்கு சமமாகும்‌. தொழிற்சங்கங்களை வேப்பங்காயாக பார்க்கும்‌ துறை அமைச்சர்‌ பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலத்தில்‌ எத்தனை முறை தொழிற்சங்கங்களை அழைத்து பேசியுள்ளார்‌.

அமைச்சருக்கு நேரம்‌ எப்போது கிடைக்கும்‌ என்று சொன்னால்‌ சென்னை பத்திரிகையாளர்‌ மன்றத்தில்‌ டாஸ்மாக்‌ செயல்பாடுகள்‌ குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தொழிற்சங்கங்கள் தயார். அமைச்சர் தயாரா..? என்பதை தெரிவிக்க வேண்டும்.

டாஸ்மாக்‌ நிறுவனத்தில்‌ தொழிலமைதியை நிலைநாட்டிட தொழிலாளர்‌ தரப்பு பிரதிநிதிகளுடன்‌ யார்த்த நிலையை விவாதித்து ஏற்புடைய வகையில்‌ மாற்று திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த மாண்புமிகு. முதலமைச்சர்‌ முன்வர வேண்டும்‌ என்பதே ஊழியர்களின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 472

    0

    0