ஆசிரியர் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் : 77 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2022, 9:47 am
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. அதே போல் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களிலும் இத்திட்டத்தை அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் கட்டாயமாக எமிஸ் என்கிற கல்வித்துறையின் செயலியில் வருகைப்பதிவை பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறக்கிப்பட உள்ளது.
இந்த செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த செயலியில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து தான் வருகையை பதிவு செய்கிறார்களா என்பதை கண்கானிக்கவும் செயலில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளிகளுக்கு 77 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் முக்கியமான சில அறிவிப்புகள், தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து இன்னும் பிற அசம்பாவிதம் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரவேண்டும்.
பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.