CPM, CPI மீது பாய்ந்த ஆசிரியர்கள்! தேர்தலில் பாடம் புகட்ட முடிவு?….

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 9:21 pm

சென்னை டிபிஐ வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் ஒரே நேரத்தில் கடந்த 29ம் தேதியன்று சென்னை நகரில் போராட்டத்தில் குதித்தனர்.

ஆசிரியர்களின் போராட்டம் : திமுகவுக்கு தலைவலி

இவர்கள் நடத்திய இந்த உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் ஒரு பேசு பொருளாக மாறிப்போனதுடன் ஆளும் திமுக அரசுக்கு பெரும் தலைவலி தரக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிட்டது.

ஏனென்றால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்களில் ஏராளமானோர் மயக்க நிலைக்கு சென்றபோதும், அவர்களை போலீசார் வலுக்கட்டாய மாகவும் குண்டுக் கட்டாகவும் தூக்கி கைது செய்தபோதும் அந்த பிஞ்சு குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியை, ஆசிரியர்கள் மயக்கம் போட்டு விழுந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் கூட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை அரசு சார்பாகவோ, திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாகவோ ஒருவர் கூட எட்டிப் பார்க்கவில்லை என்பதும் கசப்பான உண்மை.

அதேபோல கைது செய்யப்பட்ட 1600க்கும் மேற்பட்டோரை எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்ததும் எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடந்த 14 ஆண்டுகளாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் முந்தைய அதிமுக ஆட்சியின் போது 2018 ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் போராட்ட களத்திற்கே நேரடியாக சென்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் போராடுபவர்களை அரசு அழைத்துப் பேசவேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்ததுதான்.

அதேபோல 2021ல் தேர்தலின்போது வாக்குறுதி எண்- 311ல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்”வழங்கப்படும் என்று திமுக உறுதிமொழியும் அளித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட இது பற்றி வாயே திறக்கவில்லை.

அமைச்சரால் ஆசிரியர்கள் ஆதங்கம்

அதேநேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வேதனை என்னவென்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக டிபிஐ வளாகத்திற்கு வந்து எங்களை சந்தித்து விரைவில் உங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை அளித்து இருந்தால் மூன்று நாட்களுக்கு முன்பே இந்த போராட்டத்தை வாபஸ் பெற்று இருப்போம். ஆனால் இதை ஒரு கவுரவ பிரச்சினையாக கருதி தலைமைச் செயலகத்திற்கு எங்கள் பிரதிநிதிகளை மட்டும் வரவழைத்துப் பேசி எங்களை எரிச்சலடைய வைத்து விட்டனர் என்பதுதான்.

மேலும் ஊதிய உயர்வு கோரிக்கை என்றாலே அதில் உள்ள நியாயங்களை புரிந்துகொண்டு முதல் ஆளாக உரக்க குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களுக்கு எங்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் போனது எப்படி? என்ற கேள்வியை போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்களும் எழுப்புகின்றனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டதால் கடந்த வியாழக்கிழமை இரவே டிபிஐ வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு காவல் துறையினரால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் உண்ணாவிரத்தை தொடர போவதாக அறிவித்தனர்.

யாரும் எங்களை மிரட்டவில்லை

இதையடுத்து இந்த ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அக்டோபர் 6ம் தேதி பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் இடைநிலை ஆசிரியர்களும் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இது குறித்து சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகையில்,‘மாணவர் நலன் கருதி பணிக்கு திரும்புகிறோம். அரசு மீது நம்பிக்கை உள்ளது. 3 மாதத்துக்குள் முதலமைச்சர் நிச்சயம் உரிய முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்று உடனடியாக பணிக்கு திரும்புகிறோம். மாணவர்களின் நலன் கருதி வரும் 9-ம் தேதி பள்ளிக்கு சென்று வகுப்புகளை தொடர்வோம். போராட்டத்தை வாபஸ் பெறச்சொல்லி எங்களை யாரும் மிரட்டவில்லை” என்றனர்.

அதேநேரம் இவர்களது கடும் கோபத்திற்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளாகி இருக்கின்றனர் என்பதையும் உணர முடிகிறது.

CPM, CPI மீது பாய்ந்த ஆசிரியர்கள்

பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்த இரு கட்சிகளும் அறிக்கைகள் மூலம் ஆதரவு தெரிவித்தனவே தவிர அதை அரசியல் ரீதியான போராட்டமாக முன்னெடுக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை இவர்கள் முன் வைக்கின்றனர்.

இந்தத் தகவல் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு உடனடியாக தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் தெரிவித்த கருத்துகளே இதற்கான சான்று போலவும் அமைந்து விட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும் போது, “ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டோம். ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, எங்கள் கட்சி நிர்வாகிகளை அனுப்பியும் வைத்தோம். ஆனால், அவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டதால், கட்சி நிர்வாகிகளால், அவர்களை சந்திக்க முடியவில்லை, போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது, காலதாமதமின்றி அரசு தரப்பில் பேச்சு நடத்தி, சுமூக தீர்வு காண வேண்டும்”என்று குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் வீரபாண்டியன் கூறும்போது, “கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் அதிக கோரிக்கைகளை எடுத்து வருகின்றனர்’ என்று கூறுவார். ‘உழைக்கும் மக்களுக்காகவே, அவர்கள் கேட்கின்றனர், போராடுகின்றனர்’ எனக்கூறி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார்.

அதேபோல, முதலமைச்சர் ஸ்டாலினும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தவறு என்று சொல்லவில்லை. அரசு பல கட்ட பேச்சு நடத்தியுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்”
என்று தெரிவித்தார்.

“திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிடுவார்கள் என்று பார்த்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவோம் என்று இவர்கள் கூறுகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களில் பலர் கொந்தளிக்கின்றனர்.

“கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுவது, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனின் கதை போல உள்ளது. 8 நாட்களாக எங்களது போராட்டம் நடந்தபோது திமுகவின் கூட்டணி கட்சியினர் யாரும் நேரில் வந்து எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்ளிட்ட அத்தனை கட்சியினரும் போராட்ட களத்திற்கே வந்து எங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.ஊக்கமும் அளித்தனர். அப்படியெனில் இவர்கள் எங்களுக்கு முன்பு ஆதரவு அளித்ததெல்லாம் தேர்தல் ஓட்டுக்குத்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

அதுவும் அக்டோபர் 5ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகள் பலரை போலீசார் தரதரவென்று இழுத்தும், குண்டு கட்டாக தூக்கிச் சென்றும் அரசு பஸ்களில் வலுக்கட்டாயமாக ஏற்றியதை நாங்கள் மறக்கவில்லை. தவிர எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமையோடு போராடியதை கொச்சைப்படுத்தும் விதமாக உங்களையெல்லாம் புழல் சிறையில் அடைக்கவேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் மிரட்டியதையும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனால் இதையெல்லாம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் பார்த்த பின்னரும் கூட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கண்டிக்க மனம் வரவில்லை. மாறாக எங்களது பிரதிநிதிகளை போராட்ட களத்திற்கு அனுப்பி வைத்தபோது நாங்கள் ஊருக்கு சென்று விட்டோம் என்று நொண்டிச்சாக்கு கூறுகிறார்கள். ஏன் போராட்டம் தீவிரமாக நடந்த முதல் ஐந்து நாட்களில் இவர்கள் யாருமே எங்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை.

அப்படியென்றால் நீங்கள் ஆளுங்கட்சியின் அடிமைகளாக செயல்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்? தேர்தலின்போது திமுக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் படிதானே நாங்கள் போராடினோம்?… அதற்கு ஆதரவு தெரிவிப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல் வந்து விடப் போகிறது. நீங்கள் இவ்வளவு கோழைகளாக இருப்பீர்கள் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. 2024 தேர்தலில் எங்களிடம் ஆதரவு கேட்டு நீங்கள் வரத்தான் போகிறீர்கள். அப்போது நாங்கள் யார் என்று உங்களுக்கு காட்டுகிறோம்” என்று அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

அரசியல் விமர்சகர்களோ ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றனர்.

“இடைநிலை ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள், உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறச் சொல்லி எங்களை யாரும் மிரட்டவில்லை என்று கூறுகிறார்கள். போராட்டத்தை முடித்துக் கொள்ளும் நேரத்தில் இதை சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அப்படியென்றால் இவர்களை யாரோ மிரட்டி இருக்கிறார்கள், அதற்குப் பயந்துபோய்த்தான் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டனரோ? என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று ஆசிரியர்கள் சங்கத்திலும் 35 ஆயிரம் பேர் வரை இருக்கலாம். இவர்களை நம்பி பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள், மகன், மகள்கள் என்று 2 லட்சம் பேர் வரை இருக்கவும் வாய்ப்பு உண்டு. இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறாமல் போனாலும், உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறும்படி மிரட்டப்பட்டிருந்தாலும் அது எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இது ஆளும் திமுக அரசுக்கும், ஆசிரியர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அமையவும் செய்யலாம்” என்கின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 362

    0

    0