வெடிக்கும் சனாதன விவகாரம்.. அமைச்சர் உதயநிதி தந்தை ஸ்டாலினிடம் இதைச் சொல்ல தயாரா…? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி..!!
Author: Babu Lakshmanan4 September 2023, 3:55 pm
உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன், துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள காமராஜர் மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்டெம் செல் சிகிச்சை மருத்துவமனையை தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய தமிழிசை சௌந்தர்ராஜன் தன் கணவருடன் வந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஸ்டெம்செல் சிகிச்சை முறை குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:- கல்வியில் முதல் முதல் புரட்சி ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை குறிப்பிட்டு சொல்வேன். எல்லா மக்களும் கல்வியை பயின்றாக வேண்டுமென்ற ஒரு அடிப்படை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே. அந்த வழியில் தற்போது மருத்துவ கல்வியில் முன்னேறி வருகிறோம். ஆனால் நீட்டை எதிர்த்து வருகிறோம்.
நீட்டில் அதிக அளவில் பங்கெடுத்து கொள்பவர்களும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். அதில் நம்பிக்கை இருந்ததன் காரணமாகவே நீட் தேர்வில் பலர் பங்கேற்று வருகின்றனர், எனக் கூறினார்.
சனாதனத்தை ஒழிப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், எதையுமே அழித்து ஒழித்து விட முடியாது. சனாதனத்தை பற்றி பல பேர் பலர் சொல்லி இருந்த போதும், தற்போது தம்பி மிகவும் பதற்றத்தில் இருப்பதாக உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி பேசினார்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய இந்த சனாதனம் நோயை பரப்பவில்லை, தர்மத்தை பரப்பி வருகிறார்கள். தர்மத்தை பரப்பி வரும் இந்த சனாதனத்தை எப்படி ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன என்றால் அழிக்க முடியாது. இது வாழ்வியல் முறை.
அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன். துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார். குருவாயூர் சென்று அங்குள்ள சுவாமிக்கு என்ன கொடுத்தார் என்பதை நான் பார்த்தேன். நிச்சயம் அவர்களின் குடும்பத்தை நான் பாராட்டுகிறேன், என்ன காரணம் என்றால் தர்மத்தை நல்ல முறையில் பின்பற்றுபவர்களுடைய காரணத்தினால் தான், இவர்கள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாக உள்ளது.
உதயநிதி தற்போது பதட்டத்தில் உள்ள அவர், அந்த பதட்டத்தை தனித்து விட்டால் நன்றாக இருக்கும். உதயநிதி சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் முக்த் பாரத் என்கிற ஒரு சொல்லுக்கு விளக்கம் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், முக் என்பது காங்கிரஸ் இல்லாத என விளக்கம் கூறினார்.
சனாதன தர்மத்தை அழித்து ஒழித்து விட முடியாது. சர்க்காரியா கணக்குகள் எல்லாம் எடுத்துக் கொண்டால், பூச்சி மருந்து விவகாரத்தில் நாம் எவ்வளவு விளையாடி இருக்கிறோம் என்பது தெரியும். நீங்கள் இதுபோன்று சொல்ல சொல்ல சனாதன தர்மம் கொள்கையானது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும், குறிப்பிட்ட சதவீத மக்கள் இதை பின்பற்றி வருகிறார்கள். அவர்களை புண்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் சில பேரை புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல பேரை புண்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்வதற்கு முன்பாக, உன் தந்தையிடம் சென்று முதல் வேலையாக இந்து அறநிலையத் துறை என்ற ஒரு துறையை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என உதயநிதி ஸ்டாலிடம் தமிழிசை சௌந்தராஜன் கேட்டுக் கொண்டார்.
கோயில் வேண்டாம், சாமி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள், உண்டியல் மட்டும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் நான் இதைச் சுட்டிக்காட்டி கூறுகிறேன். முதலமைச்சர் எல்லா மதத்திற்கும் ஒன்றானவர் எனச் சொல்லும் அவரிடம் ஒன்றை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்துவாக இருக்கும் எனக்கு, தீபாவளி வாழ்த்து, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ஏன் கூற மாட்டீர்கள், என கேள்வி எழுப்பினார்?
இதை சொல்லாத காரணத்தை தான் பாகுபாடை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். அதனால்தான் இதை பதற்றத்தோடு நீங்கள் இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள், என சுட்டிக்காட்டினார்.
சனாதன தர்மத்தில் சாதிய பாகுபாடுகள் இருக்கிறது என்று செய்தியாளரின் கேள்விக்கு, சனாதன தர்மம் எதிராக இருக்கிறது என்று சொல்லும் இவர்கள், தற்போது ஏன் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். ஸ்கூலுக்குள் இதுவரை சாதிய புகாமல் இருந்தது. தற்போது அது புகுந்து இருக்கிறது. கிருஷ்ணன் குகன் உள்ளிட்ட அவர்களின் தோழமை பற்றி சுட்டி காட்டி பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், சமுகநீதியில் சனாதன தர்மம் என்பதை விட சமாதான தர்மம் என எடுத்துக் கொள்ளலாம்.
இதையே சமாதான தர்மம் என்று வாழ்வியல் முறையை எடுத்துச் சொன்னால், உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இதுபோல் பல விவகாரங்கள் உங்களுக்கு சரியாக புரிவதில்லை. ஏனென்றால் நீங்கள் எதையும் சரியாக படிப்பதில்லை, எனக்கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.