ஆளுநரை சீண்டினால் தெலங்கானாவில் நடந்தது தான் நடக்கும்… திமுகவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை…!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 11:10 am

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் ஆளுநர் உரையாக இருந்தாலும் நாங்கள் செய்வதுதான் சரி என்ற போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என புதுச்சேரயில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், ஜிப்பர் மருத்துவமனையில் மருந்து இலவசமாக கிடைத்தாலும், சில மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையலாம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு எதையுமே செய்யாது என்பதற்கு உதாரணம் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றும், குளிப்பதற்கும், பயணிகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ஆளுநர் உரை முடிந்தவுடன் தேசிய கீதம் இசைத்து விட்டு ஆளுநரை வழி அனுப்ப வேண்டும். இதுதான் முறை, ஆனால் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு என்றும், அவர் சில கருத்துக்களை சொல்லி இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தெலுங்கானாவில் ஆளுநர் உரை வாசிக்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஆளுநர் உரையை வாசிக்கவிடாத அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் சரி சட்டசபையில் ஆளுநர் உரையாக இருந்தாலும் எங்களை யாரும் எதுவும் கேட்கக்கூடாது நாங்கள் செய்வதுதான் சரி என்ற போக்கை ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, அது வதந்தி! வதந்தீ! வதந்தீ! என்று மூன்று முறை குறிப்பிட்டார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 806

    0

    0