லட்டு விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை தற்காலிகமாக நிறுத்தம் : உச்சநீதிமன்றம் கொடுத்த டோஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2024, 7:54 pm

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவிததுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று திருப்பதி திருமலைக்கு வந்த ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ் காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி துவாரகா திருமலை ராவ் ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக 4ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். அத்துடன் பிரம்மோற்சவத்தில் முக்கிய வாகன சேவையான கருட சேவை 8 ம் தேதி நடைபெற உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மாநில போலீசார், சிறப்பு அதிரடிப்படை, ஆக்டோபஸ் கமாண்டோ, தேவஸ்தானம் விஜிலென்ஸ் என மொத்தம் 3800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கருட சேவை அன்று மட்டும் கூடுதலாக 1250 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2700 சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் கூடுதலாக பிரம்மோற்சவத்திற்கு போலீசாருக்கு பாடி பிட் கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

பழைய குற்றவாளிகளை உடனுக்குடன் அடையாளம் காணும் விதமாக அவர்களின் கைரேகைகள் மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் சைபர் குற்றத்தை தடுப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடவீதியில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து சுவாமி வீதி உலாவை காண வசதி உள்ளது.

மாடவீதி முழுவதும் நிரம்பிய பிறகு வெளியே காத்திருக்கும் பக்தர்களுக்காக நான்கு மாட விதியின் நான்கு திசைகளிலும் ஒவ்வொரு திசையிலும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை கூடுதல் வரிசையில் மாடவீதியில் அனுமதிக்கப்பட்டு சுவாமி வாகன சேவையை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது சொந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வருவதை காட்டிலும் அரசு பொது போக்குவரத்து ஆன ஆர்.டி.சி. பஸ்கள் மூலம் திருப்பதி திருமலை பயணத்தை மேற்கொண்டால் பாதுகாப்பான பயணமாக இருக்கும்.

இதற்காக 404 பஸ்களை கொண்டு தொடர்ந்து திருமலை திருப்பதி இடையே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருமலையில் 8000 வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது எனவே 6000 வாகனங்கள் வரை நிரம்பிய பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்வது நிறுத்தப்படும். அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிஜிபி நெய் கலப்படம் குறித்து தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீவிரத்தை கொண்டு சிறப்பு விசாரணை குழு ஐஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை தற்காலிகமாக சிறப்பு விசாரணை குழுவில் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு விசாரணைக் குழு தேவஸ்தானம் சார்பில் டெண்டர் எவ்வாறு வழங்கப்படுகிறது. அதில் எவ்வாறு டெண்டர் முறைகள் கையாளப்படுகிறது.

டெண்டர் பெற்ற நிறுவனம் வழங்கும் பொருட்களை எவ்வாறு சோதனை செய்யப்படுகிறது போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்துள்ளனர்.

போலீசார் சட்டப்படி மற்றும் நீதிமன்ற நிபந்தனைகளின் படி வெளிப்படையான விசாரணையை நடத்தி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் எவ்வாறு ஆணை வழங்குகிறார்களோ அதற்கு ஏற்ப எங்களது மேற்கண்ட நடவடிக்கை இருக்கும் என அவர் தெரிவித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!