தகுதியை இழந்து விட்டீர்கள்… திமுக கவுன்சிலருக்கு மாநகராட்சி நோட்டீஸ்.. உண்மையை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதால் எழுந்த சிக்கல்..!!
Author: Babu Lakshmanan28 March 2022, 7:57 pm
தஞ்சை : திமுக கவுன்சிலர் பதவியை தானாக இழந்ததாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுவாக, தேர்தலில் போட்டியிட வேண்டும் எனில் குற்றப்பின்னணி இருக்கக் கூடாது, அரசுப் பணிகளில் இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதேபோல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் பல்வேறு விதிகள் உள்ளன. அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட பணிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும்.
இந்த நிலையில், தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கவுன்சிலர், உண்மையை மறைத்து காட்டி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது அம்பலமாகியுள்ள நிலையில், அவரது கவுன்சிலர் பதவிக்கான தகுதியை இழந்து விட்டதாக அம்மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ் என்பவர் தனது சகோதரர் ராம்பிரசாத், மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதாக மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டது. உரிய பதில் அளிக்காததால் கவுன்சிலர் பதவியை தானாக இழந்ததாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது