திமுகவில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை… வாய்ப்பு மறுத்ததால் மாநகராட்சி தேர்தலில் மனைவி, மகனோடு சேர்ந்து போட்டியிடும் திமுக முன்னாள் கவுன்சிலர்…!!
Author: Babu Lakshmanan3 February 2022, 5:14 pm
தஞ்சை : திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் 3 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
தஞ்சை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். இவர் தஞ்சை வண்டிக்காரத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகர 44வது வார்டு கவுன்சிலராக இருந்தார். வார்டு சீரமைப்பில் 44-வது பிரிக்கப்பட்டு 32, 33, 34 ஆகிய வார்டுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் செல்வகுமார் 32-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இவருடைய தந்தையும் முன்னாள் கவுன்சிலர் ஆவார். தனக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கருதி தேர்தலுக்கான வேலைகளை செய்து வந்தார். ஆனால் வெளியான தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதனால் அவர் தி.மு.க.விற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். மேலும் தான் ஏற்கனவே போட்டியிட்ட 44-வது வார்டு தற்போது 3 வார்டுகளில் இடம்பெற்றிருப்பதால் 3 வார்டுகளிலும் போட்டியிட முடிவு செய்தார். அதன்படி 32 வது வார்டில் செல்வகுமார், 33 வது வார்டில் அவரது மனைவி வனிதாவும், 34 வது வார்டில் மகன் சக்கரவர்த்தியும் போட்டியிட முடிவு செய்து, 3 பேரும் ஒன்றாக தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோன்று 34வது வார்டில் மேலும் 3 தி.மு.க.வினரும் வாய்ப்பு வழங்காததால் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.
திமுகவின் தஞ்சை சட்டமன்ற தேர்தலில் 2016ல் வேட்பாளராக போட்டியிட்ட அஞ்சுகம் பூபதி, தற்போது தஞ்சை மாநகராட்சியின் 51 வது வார்டில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதி தனது கணவருடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.