அரசு பாரில் மது அருந்திய இருவர் பலி.. கள்ளச்சாராய சோகம் அடங்குவதற்கு மற்றொரு அதிர்ச்சி ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!!
Author: Babu Lakshmanan22 May 2023, 9:52 am
தஞ்சையில் அரசுக்கு சொந்தமான பாரில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. மீன்சந்தைக்கு ஆட்கள் எந்தநேரமும் வந்து கொண்டே இருப்பதால், அதிகாலை 6 மணி முதலே சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் டாஸ்மாக் அருகே செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான பாரில் 60 வயதான குப்புசாமி என்பவர் கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி குடித்துள்ளார். மது அருந்திய சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், அதே இடத்தில் கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த 36 வயதான விவேக் என்ற மீன் வியாபாரியும், மது குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மதுவை குடித்து இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, சம்பந்தப்ப்டட பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பார் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்த குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய 2 பேரின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகளில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் இருவரின் உடல்களிலும் சயனைடு இருப்பதும், அவர்கள் அருந்திய மதுவிலும் சயனைடு இருப்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை கொலை செய்வதற்காக மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா? அல்லது சயனைடு கலந்த மதுவை குடித்து இருவரும் தற்கொலை மேற்கொண்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர், “இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம். இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது,” என தெரிவித்தார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசுக்கு சொந்தமான பாரில் கள்ளச்சந்தையில் விற்பனையான மதுவை குடித்து 2 பேர் உயிரிழந்திருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.