பட்டியலின இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்.. திமுக அரசை வசை பாடிய எடப்பாடி பழனிசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 12:09 pm

பட்டியலின வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்.. திமுக அரசை வசை பாடிய எடப்பாடி பழனிசாமி!!

நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் படுகையில் கடந்த 30ஆம் தேதி கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்களை வழிமறித்து தாக்கியதுடன் அவர்களின் சாதியை கேட்டு மிரட்டி நிர்வாணப்படுத்தியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமதித்ததாகவும் அவர்களுடைய செல்போனை பறித்ததாகவும் புகாரின் பேரில் பொன்மணி, ராமர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை தச்சநல்லூர் மணிமுத்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் மனோஜ்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மாரியப்பனும் தொழிலாளர்கள். இவர்கள் நேற்று முன் தினம் மாலை வேலையை முடித்துவிட்டு மணிமுத்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த சிலர் இளைஞர்களை வழிமறித்து தாக்கியதுடன் அவர்களிடம் ஜாதியை கேட்டு மிரட்டி நிர்வாணப்படுத்தியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமதித்ததாக சொல்லப்படுகிறது.

நள்ளிரவில் அவர்களிடம் இருந்து தப்பிய மனோஜ்குமார், மாரியப்பன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்மணி (வயது 25), மணக்காடு பகுதியை சேர்ந்த ராமர் மகன் ஆயிரம் (19), சங்கரபாண்டியன் மகன் நல்லமுத்து (21), பாலகிருஷ்ணன் மகன் ராமர் (22), மாரிமுத்து மகன் சிவா (22) ஆகியோர் தொழிலாளர்களை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாா் 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 479

    0

    0