பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு அறிவித்த முதலமைச்சர்.. வெட்கமே இல்லாமல் இதுலயும் ஸ்டிக்கர் : அண்ணாமலை விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 1:58 pm

பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு அறிவித்த முதலமைச்சர்.. வெட்கமே இல்லாமல் இதுலயும் ஸ்டிக்கர் : அண்ணாமலை விமர்சனம்!

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ம் ஆண்டு “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை. அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

‘பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவ்த்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மா அவர்களுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்.

அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா அவர்கள்.

இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 227

    0

    0