முதலமைச்சருக்கு தோல்வி பயம்.. ஜூன் 4க்கு பிறகு இண்டியா கூட்டணிக்கு தூக்கமே இருக்காது : வானதி சீனிவாசன் தடாலடி!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2024, 3:24 pm
முதலமைச்சருக்கு தோல்வி பயம்.. ஜூன் 4க்கு பிறகு இண்டியா கூட்டணிக்கு தூக்கமே இருக்காது : வானதி சீனிவாசன் தடாலடி!
கடந்த 22-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தன்னுடைய ஆட்சி முடியப்போகிறது என்று பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை எனவும் தோல்வி பயம் பிரதமரின் முகத்திலும் கண்களிலும் நன்றாக தெரிகிறது எனவும் பேசியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ” முதல் அமைச்சர் போகிற போக்கில் வார்த்தைகளை அள்ளி தெளித்து இருக்கிறார். 400 தொகுதிகளைத் தாண்டி பா.ஜ.க. வெற்றி பெறும் என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இதை ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 23 ஆண்டுகளாக தோல்வியே காணாத தலைவர் பிரதமர் மோடிக்கு, எப்போதும் வெற்றிதான். பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் என கூறுபவர்களை கண்டு, மக்கள் நகைக்கவே செய்வார்கள்.
தோல்வி பயம் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பின் போது யார் தங்களுக்கு உதவியது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். முரசொலியை மட்டும் படிப்பவர்கள் வேண்டுமானால் ஸ்டாலின் சொல்வதை நம்பலாம். தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக, தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரம் கோடி வரை நீதி பெற்றுள்ளது. அதுவும் லாட்டரி விற்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து 500 கோடி பெற்றுள்ளது. ஆனால், 450-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பாஜக நிதி பெற்றது குறித்து முதலமைச்சர் திருச்சி கூட்டத்தில் குறை கூறியிருக்கிறார்.
தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தவிர்க்கவே தேர்தல் பத்திரத்திட்டத்தை பாஜக கொண்டு வந்தது. முறைப்படி வங்கிகள் மூலம் நிதி பெற்றால் அதையும் குறை கூறுகிறார்கள்.’ தந்தை-மகன்-பேரன் என கட்சித் தலைவர், முதலமைச்சர் பதவியை அபகரிக்கும் ஒரு கட்சிக்கு, மற்ற கட்சிகளை பாசிச கட்சி எனக் கூற எந்த உரிமையும் இல்லை. ஜூன் 4-ம் தேதி பிரதமர் மோடி தூக்கத்தை தொலைக்கப் போகிறார் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு ஸ்டாலின் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் தங்களது தூக்கத்தை தொலைக்கப் போகிறார்கள்” என்றார்.