திருப்பதி லட்டுக்காக நெய் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் BLACK LIST : தேவஸ்தானம் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan23 July 2024, 7:57 pm
லட்டு மற்றும் நெய்வேத்திய பிரசாதங்கள் ஆகியவற்றை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் பலநூறு கோடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்கிறது.
தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் தரம், மனம்,சுவை ஆகியவற்றுடன் கூடிய நெய்யை மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்பது நிபந்தனை.
கடந்த காலங்களில் நெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்கள் தரம், மனம்,சுவை ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ள நெய்யை சப்ளை செய்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டன.
இதனால் திருப்பதி மலையில் தயார் செய்யப்படும் லட்டு உள்ளிட்ட மற்ற பிரசாதங்களிலும் தரக்குறைவு ஏற்பட்டது.
இது பற்றி பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் தரமான நெய்யை கொள்முதல் செய்ய நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து பார்த்தபோது அவற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சப்ளை செய்த நெய்யில் தாவர கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அந்த நிறுவனத்தை தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக சர்வதேச தரத்துடன் கூடிய ஆய்வுக்கூடம் ஒன்றை திருப்பதி மலையில் நிறுவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் திருப்பதி மலைக்கு வரும் நிலையை அவ்வப்போது சோதனை செய்து அதன் தரத்தை உறுதி செய்ய முடியும்.
தமிழ்நாட்டை சேர்ந்த பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்று தொடர்ந்து நெய் சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனத்தை நாங்கள் கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம்.
எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க நெய் கொள்முதல் செய்வதற்கு தேவையான வழிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் அமைத்துள்ள நிபுணர் குழு ஆலோசனைகளை வழங்கும்.
அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் இனிமேல் நெய் கொள்முதல் நடைபெறும் என்று தெரிவித்தார்.