முதலமைச்சர் ஸ்டாலினை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி.. விசாரிக்காமல் அழைத்து சென்றாரா அமைச்சர்? நடந்தது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan22 April 2023, 6:16 pm
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் எனக் கூறி வலம் வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்துகொண்டதாகவும், அதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்று விளையாடியதாகவும், அதில் இறுதிவரை முன்னேறி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானை வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடித் தந்திருப்பதாகக் கூறி ஊரில் கோப்பையுடன் வலம்வந்திருக்கிறார். ஊர் மக்களும் வினோத்பாபுவை தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடினர்.
இந்த நிலையில், கோப்பையுடன் அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது, தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த வினோத்பாபு பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருப்பதாகக் கருதி வினோத்பாபுவை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார்.
அப்போது தனக்கு அரசு வேலை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். வினோத்பாபு, அமைச்சர் ராஜகண்ணப்பன் இருவரும் முதலமைச்சரை உலகக் கோப்பையுடன் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த நிலையில் வினோத்பாபு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி கேப்டன் என்பதும், உலகக் கோப்பையை வென்று வந்ததாகச் சொல்வதெல்லாம் பொய் என சென்னை தலைமைச் செயலகத்துக்குப் புகார் சென்றிருக்கிறது.
இதையடுத்து, உளவுத்துறை மூலம் வினோத்பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வினோத்பாபு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அசோசியேஷன் சார்பில் புகாரளிக்க உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் கிரிக்கெட் அணியின் தமிழக துணை கேப்டன் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
0
0