17 தொகுதிகளை பங்கிடுவதில் திமுக கூட்டணியில் இழுபறி?… அதிக சீட்கள் கேட்பதாலும் சிக்கல்?…

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 7:43 pm

17 தொகுதிகளை பங்கிடுவதில் திமுக கூட்டணியில் இழுபறி?… அதிக சீட்கள் கேட்பதாலும் சிக்கல்?…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக மட்டும் குறைந்தபட்சம்
25 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதும் எஞ்சிய 14 எம்பி சீட்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதும் அக்கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனால்தான் காங்கிரஸ், மதிமுக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு ஒரு சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்தும் கூட எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது வெளிப்படை. இரண்டாம் சுற்று பேச்சின்போது முடிவுகள் எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், வரும் 12ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் முஸ்லிம் லீக்குடன் திமுக பேச்சு நடத்த இருக்கிறது. விரைவில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் திமுக பேச்சுக்கு அழைக்கும் என்பது உறுதி.

இதுவரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றை பேச்சுவார்த்தைக்கு திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக
அழைக்கவில்லை என்றாலும் கூட எங்களுக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கவேண்டும் என இந்த கட்சிகள் இப்போது திடீர் கோரிக்கை வைத்துள்ளன. இதுவும் திமுகவை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் 12, விசிக 8, மதிமுக 5, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 4, முஸ்லிம் லீக் 2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அறிவாலயத்தில் அது தொடர்பான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை 2019 தேர்தலில் கொடுத்த எம் பி சீட்டுகளை அப்படியே பெற்றுக் கொண்டு போட்டியிட்ட நிலையில் இந்த கட்சிகள் இப்போது மட்டும் ஏன் அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடிக்கின்றன
என்பதுதான் புரியவில்லை என்று மனம் குமுறுகிறது.

அதுவும் தமிழகத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி 47 சதவீத ஓட்டுகளை பெற்று அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கூறப்படும் நிலையில் இந்த கட்சிகள் இப்படி தங்கள் குரலை உயர்த்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் விசிகவும், மதிமுகவும் தங்களது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று வெளிப்படையாகவே அதிரடி காட்டுகின்றன. மக்கள் நீதி மய்யமோ, பேசுவதற்கு அழைப்பு விடுக்கும் முன்பாகவே டார்ச்லைட் சின்னத்தில்தான் எங்கள் கட்சி போட்டியிடும். வேறு சின்னத்தில் நிற்க எங்களுக்கு விருப்பமில்லை என்றும் கண்டிப்பு காட்டுகிறது. அவருடைய கட்சி தென் சென்னை அல்லது கோவை தொகுதியை கேட்கிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தென் சென்னை, கோவை, மதுரை, திருச்சி கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர், கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவண்ணாமலை,ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 17 தொகுதிகள் பலவற்றில் போட்டியிடுவதற்கு திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுமே விருப்பம் தெரிவித்து இருக்கின்றன என்பதுதான். காங்கிரஸ் விருது நகர், சிவகங்கையை கேட்டால் இந்திய கம்யூனிஸ்ட்டும், மதிமுகவும் அதைக் கேட்கின்றன. இந்த தொகுதிகளின் திமுக மாவட்ட நிர்வாகிகளோ இம்முறை இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடவேண்டும் என்று அறிவாலயத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரசும், மக்கள் நீதி மய்யமும் ஒரே நேரத்தில் தென் சென்னையை குறி வைக்கின்றன. ஆனால் இந்த தொகுதி தற்போது திமுக வசம் உள்ளது. அதனால் அக் கட்சி அதை விட்டுக் கொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

அதேபோல கமல் கோவையில் போட்டியிடுவதை மார்க்சிஸ்ட் விரும்பவில்லை. ஏனென்றால் தற்போது அந்த தொகுதி சிபிஎம் வசம் தான் உள்ளது. காங்கிரசிடம் இருக்கும் திருவள்ளூர் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கும்படி திருமாவளவன் மல்லுக்கட்டுகிறார். இதேபோன்ற இடியாப்ப சிக்கல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் உள்ளது. இந்தத் தலைவலியை தீர்ப்பதற்கே திமுகவுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும்.

“ஆனால் பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றை புள்ளியில் திமுக கூட்டணி கட்சிகள் உறுதியாக இருப்பதால் இதையெல்லாம் ஸ்டாலின் எளிதாக சமாளித்து தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்து விடுவார். அதற்குரிய ஃபார்முலா அவருக்கு நன்றாகவே தெரியும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“எங்களுக்கும் ஒரு சீட்டு கொடுங்கள் என்று கேட்கும் சிறு சிறு கட்சிகளுக்கு 2026 தமிழக தேர்தலில் அதிக தொகுதிகள் தருகிறோம் என்று உறுதிமொழியை திமுக அளிக்கலாம். அல்லது கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் வரை தேர்தல் நன்கொடை கொடுத்ததுபோல சிறப்பாக கவனிக்கவும் படலாம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு ஒரு தொகுதிக்கு
மேல் வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுவதால் இம்முறையும் அவர்களுக்கு செமத்தியான கவனிப்பு கிடைக்க வாய்ப்புண்டு. அதேபோல மதிமுகவுக்கும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படலாம்.

என்றுபோதிலும் இந்த முறை ஒரு பொதுத்தொகுதியை சேர்த்து திருமாவளவன் கேட்பதால் அக்கட்சிக்கு மூன்று தொகுதிகள் கிடைப்பது உறுதி. ஏனென்றால் விசிகவை ஸ்டாலின் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

இந்த கணக்கின்படி பார்த்தால் திமுக 25, காங்கிரஸ் 6, விசிக 3, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம். காங்கிரஸுக்கு வேறு வழி இல்லை என்பதால் புதுச்சேரியையும் சேர்த்து கட்சிக்கு 7 தொகுதிகளே கிடைக்கும்.

இந்தத் தொகுதி பங்கீட்டில் திருப்தி அடையாத கட்சிகள் தங்களது அதிருப்தியை மறைமுகமாக தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் முணுமுணுக்கவும் செய்யலாம். ஆனால் வைட்டமின் ‘சி’ கிடைத்தவுடன் அந்த சலசலப்புகள் அப்படியே அடங்கிவிடும். வேறு கூட்டணிக்கும் அந்தக் கட்சிகள் தாவாது.

திமுகவை பொறுத்தவரை இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நேர்ந்தால் நாடாளுமன்றத்தில் 25 எம்பிக்களுடன் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருந்தால்தான் அதிகாரம் மிகுந்த முக்கிய இலாகாக்களை கேட்டு பெற முடியும் என்று நினைக்கிறது. அதனால் வரும் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளால் 2019 தேர்தல் போல எதிர்பார்க்கும் தொகுதிகளில் போட்டியிட முடியாது என்பதே எதார்த்தம்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, இரண்டாவது சுற்று பேச்சு முடிந்த பிறகே திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதும், ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் கிடைக்குமா? என்பதும் உறுதியாக தெரிய வரும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 329

    0

    0