தொகுதியில் விரட்டியடிக்கும் திமுக?…திண்டாட்டத்தில் திருமா, ஜோதிமணி!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 9:46 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதற்கு யாருக்கு சீட் கிடைக்கிறதோ, இல்லையோ கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பிக்கும் சீட் கிடைப்பது மிகக் கடினம் என்ற செய்தி இப்போதே இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

சுறுசுறுப்பான பாஜக

பொதுவாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்நேரத்தில்தான் தொகுதிகளை கணிக்கும் வேலையில் கட்சிகள் ஈடுபடுவது வழக்கம். இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று எம்பிக்கள் காய் நகர்த்துவார்கள்.

என்ற போதிலும் இந்த தேர்தலில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் தொகுதிகளை தேர்வு செய்வதில் இப்போதே சுறுசுறுப்பாக இறங்கிவிட்டன. அந்த வகையில் தமிழக பாஜக தாங்கள் போட்டியிட விரும்பும் ஒன்பது தொகுதிகளை குறி வைத்து தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கி இருக்கிறது.

அதேபோல திமுக கூட்டணியிலும் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன. ஆனால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக முடிவு செய்த பின்புதான் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும், அதில் யார் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்பது பற்றி உறுதியாக தெரியவரும்.

ஜோதிமணிக்கு கல்தா?

இருந்தபோதிலும் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணிக்கு இந்த முறை கரூர் தொகுதியை தரவே கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இப்போதே போர்க்கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். கரூர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் பொது இடங்களிலும், சுவர்களிலும் திமுகவிற்கான இடம் என்று திமுக தொண்டர்கள் எழுதி வைத்துள்ளனர். அதாவது வரும் தேர்தலில் திமுகதான் இங்கே போட்டியிடும் என்பதை உறுதி செய்யும் விதமாக இப்படி இடம் பிடித்து வைத்துள்ளனர்.

தொகுதி எம்பியான ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கடந்த ஒன்றரை வருடங்களாக மோதல் போக்கு இருப்பதாலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜோதிமணி நன்றி தெரிவிக்கும் கூட்டங்களுக்கு மட்டுமே வந்தார், அதன் பிறகு அவர் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவே இல்லை, கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதில் ஆர்வமும் காட்டவில்லை. அதனால் இந்த
முறை கரூரை அவருக்கு ஒதுக்கினால் காங்கிரஸ் தோற்பது நிச்சயம். திமுக கூட்டணி ஒரு தொகுதியை இழக்க நேரிடும் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அறிவாலயத்திடம் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் கரூர் தொகுதியை நமது கட்சிக்கே ஒதுக்கவேண்டும் என்று சமீபத்தில் அந்த மாவட்ட திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியும் உள்ளனர்.

களமிறங்கும் செந்தில்பாலாஜியின் தம்பி?

முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் சொல்லை ஒரு போதும் தட்ட மாட்டார், அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார் என்பதால் இந்த முறை ஜோதிமணிக்கு கரூரில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாக தெரிகிறது.

தவிர கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளில் பெரும்பாலானோர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கரூர் தொகுதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முடிவு செய்து திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஈரோட்டில் ஜோதிமணி

திமுக நிர்வாகிகள் தன்னை கரூரில் போட்டியிடாமல் தடுப்பதற்கு ரவுண்டு கட்டி உள்ளடி வேலைகள் செய்து வருவதை ஜோதிமணியும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார். இதனால் அவர் இம்முறை திண்டுக்கல் அல்லது ஈரோடு தொகுதியை திமுகவிடம் கேட்டு பெறும் முயற்சிகளில் இறங்கி விட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அபிமானத்தை பெற்றவர் என்பதால் ஜோதிமணிக்கு ஈரோடு தொகுதி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் தற்போது ஈரோடு தொகுதி எம்பியாக உள்ள மதிமுகவின் கணேசமூர்த்தி
மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை வைகோ விரும்பவில்லை. ஏனென்றால் தனது மகன் துரை வைகோவுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்கித் தரும்படி திமுக தலைவர் ஸ்டாலினிடம் அவர் இப்போதே முன் பதிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

காய் நகர்த்தும் மாணிக்கம் தாகூர்

இதனால் விருதுநகர் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், சிவகங்கை தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். அந்த தொகுதியின் தற்போதைய எம்பி கார்த்தி சிதம்பரம், திமுக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும், தான் ஒரு நடுநிலையாளர் என்பதுபோல அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாணிக்கம் தாகூர் சிவகங்கை தொகுதியை கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருக்கிறார். இதனால் கார்த்தி சிதம்பரம் பாடுதான் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தொகுதி மாறும் திருமா?

இது ஒரு புறம் இருக்க, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 2019 ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடலூர் மாவட்ட திமுகவினர் வேறொரு விதத்தில் செக் வைத்துள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக திருமாவளவன் மூன்றாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். அதற்கு முக்கிய காரணம் அவர் பிடிவாதமாக தனது கட்சியின் சின்னமான பானையில் போட்டியிட்டதுதான். ஏனென்றால் அவருடைய கட்சியை சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதனால் இந்த முறை சிதம்பரம் தொகுதியை திருமாவளவனுக்கு ஒதுக்கவே கூடாது என்று கடலூர் மாவட்ட திமுகவினர் அறிவாலயத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில் போட்டி?

தவிர திருமாவளவனுக்கும், சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட நாட்டமில்லை. ஏனென்றால் கடைசி சுற்று ஓட்டு எண்ணிக்கையில்தான் தட்டு தடுமாறி மயிரிழையில் அவரால் வெற்றி பெறவே முடிந்தது. அதனால் சிதம்பரம் என்றாலே அவருக்கு இப்போதும் உதறல் எடுக்கிறது. இப்படிப்பட்ட திக் திக், பதைபதைப்பு நிலையை அவர் விரும்பவும் இல்லை.

இதனால் சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. திருவள்ளூரில் போட்டியிடும் எண்ணத்தை திமுக தலைவர் ஸ்டாலினிடம் திருமாவளவன் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் இத்தொகுதியில் மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது என்பதால் அக்கட்சியும் எளிதில் விட்டுக் கொடுக்க வாய்ப்பு இல்லை.

அதேநேரம் திருமாவளவன் திமுகவின் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டால் அவருக்கு சிதம்பரம் தவிர வேறு ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தயாராகவே உள்ளது என்கிறார்கள்.

“திமுக கூட்டணி கட்சிகள் நினைப்பது போல 2024 தேர்தலில் அமோக வெற்றி பெற்று விடலாம் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

திமுக கூட்டணி ஜெயிக்குமா?

“அக்கூட்டணி மிகக் கடுமையான சவாலை அதிமுக, பாஜகவிடமிருந்து எதிர்கொள்ள வேண்டி இருக்கும். என்னதான் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகள் தொகுதிகளை மாற்றிக்கொண்டு களம் இறங்கினாலும் அது அவர்களுக்கு கை கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.

ஏனென்றால் டாஸ்மாக் மதுபான விவகாரத்தில் மட்டுமின்றி மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு, முற்றிலும் சீர் குலைந்த சட்டம்-ஒழுங்கு, சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கள்ளச்சாராய விற்பனை, குழந்தை தொழிலாளர் விவகாரம், திமுக நிர்வாகிகளின் அடாவடி செயல்கள், நில அபகரிப்பு போன்ற பல பிரச்னைகளில் மக்களிடம் திமுக ஆட்சி கடுமையான அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது.

நகர்ப்புற சாதாரண அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பது ஆகியவை மட்டுமே சாதகமான அம்சங்களாக உள்ளன.

எனினும், முந்தைய அதிமுக ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்கிற எண்ணம் தமிழக மக்களிடம் பரவலாக உருவாகத் தொடங்கி விட்டது. வாக்காளர்களின் இந்த மனப்போக்கை மீறி திமுக கூட்டணி 2019 தேர்தல் போல அபார வெற்றி பெறுமா? என்பது சந்தேகம்தான்.

இணைந்து பணியாற்றினால் வெற்றி

அதிமுக பாஜக கூட்டணி அமைந்துவிட்டால் குறைந்த பட்சம் 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரம் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் திமுக அணிக்கு பலத்த போட்டியை உருவாக்க முடியுமே தவிர அதை வெற்றியாக மாற்றுவது கடினமாகவே இருக்கும்.

அதனால் இப்போதே இணக்கமாக செயல்படத் தொடங்கினால்தான் இந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் தேர்தல் நேரத்தில் ஒருமித்த மனதுடன் இணைந்து பணியாற்றுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டணியையும் தொகுதிகளையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தால் அதற்கு குறைவான பலனே கிடைக்கும். இதை இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் புரிந்து கொண்டால் சரி” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 456

    0

    0