திமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் அமலாக்கத்துறை : சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் ரியாக்ஷன்!!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2023, 10:01 pm
பெங்களுருவில் நேற்றும், இன்றும் இரண்டு நாளாக எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, ‘INDIA’ என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த கூட்டம் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார்.
அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுக்கப்பட்டுள்ளன.
பாட்னா, பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நம்பிக்கை மகிழ்ச்சியை தருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதை முன்வைத்து செயல்படுகிறோம். புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும் என தெரிவித்துள்ளார். மேலும் அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், அமலாக்கத்துறை சோதனை போன்று அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்பார்த்ததுதான். அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். பிரதமரால் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டோர் அவரது அருகிலேயே அமர்ந்துள்ளனர் என விமர்சித்துள்ளார்.