வெள்ளம் இங்கே?…மேயர் எங்கே?… கொதிக்கும் நெல்லை மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 9:19 pm

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டது நெல்லை தான்.

அந்த மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய ஒரு லட்சம் கன அடி நீர், ஏராளமான இடங்களில் ஏரி, குளங்கள், கண்மாய்கள் உடைப்பெடுப்பு ஆகியவற்றால் நெல்லை நகரம் மட்டுமல்லாமல் 35க்கும் மேற்பட்ட கிராமங்களை மழைநீர் சூழ்ந்து மக்களை பெரும் இன்னலுக்கும் உள்ளாக்கி விட்டது. குறிப்பாக நெல்லை சந்திப்பு பகுதியில் 10 அடி உயரத்திற்கும் மேலாக வெள்ளம் பாய்ந்து ஓடியது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் வீடுகளும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளும் இந்த திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைப்பது பேரிடர் மீட்பு படையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்த வெள்ளம் எப்போது வடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருப்பதால் மீட்புப் பணிகள் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்கிறார்கள்.

மேலும் வீடுகளில் குடிநீர், மின்சாரம், தொலைத் தொடர்பு வசதி எதுவும் இல்லாமல் மூன்று நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கானோர் பரிதவித்தும் வருகிறார்கள்.

தவிர நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நிலங்களில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியும் விட்டன. தென்னை, வாழை மரங்களும் அடியோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி விட்டுள்ளது. ஏராளமானோர் தங்களது கால்நடைகளையும் பறிகொடுத்துள்ளனர்.

மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை தமிழக அரசு அவசர நிலை கருதி அழைக்க அவர்களும் உடனடியாக களம் இறங்கி விட்டனர். முப்படையினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கும் பணியிலும்
அவர்களுக்கு குடிநீர், உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 11 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு 106 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் 800 பேரும் மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையேதான், நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் எங்கே என்ற கேள்வி கடந்த 17ம் தேதி விஸ்வரூபம் எடுத்தது. மழை, வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மேயர் சரவணன் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கே போனார்?… என்று பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்துப் போய் சரமாரியாக கேள்விகளை எழுப்பத் தொடங்கிய பிறகுதான் அவர் சேலத்தில் நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுபற்றி கேள்விப்பட்டதும் மாநாட்டு பந்தலில் இருந்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, நெல்லை மேயரை அழைத்து யோவ் உங்க ஊர்ல கடுமையான மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு, நீ சேலத்துல என்ன பண்ற…முதல்ல அங்க போய் கவனிய்யா… ஓடு ஓடு உங்க ஊருக்கு ஓடு என்று விரட்டி அடிக்காத குறையாக சத்தம் போட்ட பிறகுதான், நெல்லை மேயர் சரவணன் அந்த இடத்தையே காலி செய்துவிட்டு தனது ஊருக்கே கிளம்பி இருக்கிறார்.

இல்லையென்றால் நெல்லைக்கே திரும்பாமல் சேலத்திலேயே முகாம் போட்டிருப்பார் போலிருக்கிறது.

இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பர் 18ம் தேதி மாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நெல்லை மாவட்டத்தில் 36 கிராமங்கள் மிக கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் உடைப்பும் ஏற்பட்டு இருக்கிறது. எதிர்பார்க்காத கனமழையால் பெரியளவில் பாதிக்கப்பட்டும் உள்ளது. வெள்ளத்தால் இன்னலுக்கு உள்ளான மக்களை காப்பதே அரசின் நோக்கம். மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுத்த பின்னர் முதலமைச்சர் நிவாரணம் பற்றி அறிவிப்பார்” என்று தெரிவித்தனர்.

“திமுக அரசு தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கன மழை, வெள்ளப்பெருக்கை எதிர்பார்த்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்த அளவிற்கு பெரிய பாதிப்பை மக்கள் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டு இருக்காது” என்று சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுவது இதுதான். “சென்னை வானிலை ஆய்வு மையம், கடந்த 14 -ம் தேதி மதியமே தென் மாவட்டங்களில் டிசம்பர் 16, 17 ஆகிய இரு நாட்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மிக கன மழை என்றால் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை என்ற அளவிற்குத்தான் இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதியோ, என்னவோ இதை தமிழக அரசு சீரியஸ் ஆக எடுத்து கொண்டதாக தெரியவில்லை. பெயரளவிற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் கூட தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக தெரியவில்லை.

ஆனால் வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக 30, 40 சென்டிமீட்டர் அளவிற்கு அதி கனமழைக் கொட்டி தீர்த்து விட்டது. இது எதிர்பாராத ஒன்று என்றாலும் கூட சென்னை காட்டுப்பாக்கத்தில் கடந்த 4 ம் தேதி அதிகபட்சமாக ஒரு நாளில் பெய்த 35 சென்டிமீட்டர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை மனதில் கொண்டாவது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு விடுத்திருக்கலாம்.

ஆனால் 16ம் தேதி மதியம் தொடங்கி 17ம் தேதி பகலில் பெய்த அதி கனமழைக்கு பிறகே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துகொண்டு திமுக அரசு வெள்ள நிலைமையை சமாளிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தெரிகிறது. அப்போதும் கூட மத்திய அரசிடம் முப்படைகளின் உதவியை நாடாமல் 18-ம் தேதி மதியம்தான் கேட்கிறது. இதை 17ம் தேதி காலையிலேயே கேட்டிருந்தால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் முப்படைகளும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகளில் இறங்கி இருக்கும். ஆனால் ஒரு நாள் தாமதம் ஆகிவிட்டது.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், சென்னை நகருக்குள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு, அமைச்சர் உதயநிதியின் வசம் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை மத்திய அரசிடம் விண்ணப்பித்து முப்படைகளிடம் இருந்தும் 16 மணி நேரத்தில் தடை இல்லாத சான்றிதழ் பெற்றுவிட்டது. அதேநேரம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் வெள்ளப் பேரிடர் நடவடிக்கைகளுக்கு முப்படைகளை அழைக்க தமிழக அரசு தயக்கம் காட்டியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதைவிட இன்னொரு வருத்தமான விஷயம் என்னவென்றால் அதி கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் முழுமை அடையாத நிலையிலேயே நான்கு மாவட்ட மக்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மூவரும் கூறுகின்றனர்.

ஒருவேளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு திமுக எம்பி, எம்எல்ஏக்கள், சென்னை மேயர், கவுன்சிலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் தாமதமாக சென்றபோது அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதை மனதில் வைத்து நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற உறுதி மொழியை அமைச்சர்கள் அளித்தார்களோ, என்னவோ தெரியவில்லை.

நெல்லை நகரில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத நிலைக்கு தயாராக இருக்க வேண்டிய சரவணன் அமைச்சர் உதயநிதியின் முழுமையான ஆதரவைப் பெற்று மேயர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த ஒரு மாதமாக சென்னையிலேயே தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 7-ம் தேதி நெல்லை மேயர் சரவணன் மீது, திமுக கவுன்சிலர்கள் 31 பேர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அமைச்சர் உதயநிதியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, சரவணன் சேலம் சென்றது நெல்லை நகர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எதிர்பாரா மழை, வெள்ளம் குறித்து நெல்லை மேயர் சரவணன் போன்றவர்கள் இனியாவது விழித்துக் கொண்டால் சரிதான்!

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 605

    0

    0