ஆவின் நிறுவனத்தில ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்கள் இயங்கிய விவகாரம் : 6 பேர் பணியிட மாற்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2023, 10:04 pm
வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார். அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது.
அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலி பதிவெண் மூலம் வாகனம் இயக்கப்பட்ட விவகாரத்தில் சிவக்குமார், தினேஷ் ஆகியோர் இயக்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தத்தை ஆவின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வேலூர் ஆவினில் பணிபுரியும் செயல் அலுவலர்கள் 6 பேர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 8 துறை தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பணியில் கவனக் குறைவாக இருந்தது ஏன்? பணியை சரியாக செய்யாதது ஏன்? என கேள்வி கேட்டுள்ளது.