தரகர் வேலை பாக்கறாரு அமைச்சர்.. திமுக அமைச்சர்கள் தெரு தெருவா சுத்தறாங்க : அன்புமணி காட்டம்!!!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2023, 7:52 pm
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். 2026ல் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். லாபத்தில் இயங்கும் கேஸ் நிறுவனங்கள், கேஸ் விலையை உயர்த்த கூடாது. உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
நிழல் நிதிநிலை அறிக்கை இந்த வாரம் பாமக சார்பில் வெளியிடப்படும். அதானி குழுமம் மீதான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன் என தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிக்கூத்து. இது ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய அவப்பெயர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பணம் மற்றும் பரிசுகளை கொடுத்து தேர்தலை நடத்த வேண்டுமா என்ற கேள்வி உள்ளது. 1 மாதம் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியை குத்தகைக்கு எடுத்து கொண்டதால் தமிழக அரசு பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தது.
ஆளும்கட்சி, ஆண்ட கட்சி என இருவருமே பணம் கொடுத்துள்ளனர். இது உலகத்திற்கே தெரிந்த விஷயம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் இருக்குமா? இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றது ஜனநாயகம்தான்.
விரைவில் விற்கப்பட உள்ள என்எல்சி நிறுவனத்திற்கு இடைத்தரகராக வேளாண் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றனர். ஒரு புறம் வேளாண் பட்ஜெட் போடப்படுகிறது மற்றொரு புறம் வேளாண் நிலத்தை எடுக்கிறார்கள். இந்த போக்கை மாற்றவில்லை என்றால் வேளாண் பட்ஜெட்டின் போது நேரில் சென்று போராடுவோம்.
ஆன்லைன் சட்ட மசோதாவிற்கு ஏன் ஆளுநர் கையெழுத்து போட மறுக்கிறார் என விளக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் 15 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆளுநர் தான் காரணம். ஆன்லைன் கம்பெனிக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். இதற்கு தமிழக அரசும் மெத்தனமாக இருக்கிறது.
சேலம் விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வர வேண்டும். சேலம் – கர்நாடக எல்லையில் ஒருவரை சுட்டு கொன்ற கர்நாடக வனத்துறையினரை விரைந்து கைது செய்யவில்லை என்றால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் சூழல் ஏற்பட்டுவிடும்.
3 தலைமுறையாக நடைபெறும் சேலம் பாதாள சாக்கடை திட்டம் அடுத்த தலைமுறையில் கூட நிறைவு பெறாது. சரியான திடமிடல் இல்லாததே காரணம் இந்த கால தாமதத்திற்கு காரணம். 1.30 லட்சம் பேர் படித்த இளைஞர்கள் வேலை இன்றி உள்ளனர். வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் அரசு கவணம் செலுத்த வேண்டும்.
சேலம் இரும்பாலையில் காலியாக உள்ள 3500 ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் திருப்பி தர வேண்டும். அல்லது தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு போதும் தனியாரிடம் ஒப்படைக்க விட மாட்டோம். சேலம் மாநகரில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம் சரியான திட்டமிடல் இல்லாததால் அடுத்த 10 ஆண்டுகளில் இடிக்க வேண்டிய சூழல்தான் ஏற்படும் என்றார்.