புதிய ஆட்சி குறைபிரசவ ஆட்சியாகத்தான் அமையும் : முன்னாள் முதலமைச்சர் ஆரூடம்!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2024, 11:26 am
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக அதிக இடங்களை பெறும் என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் ஆகி உள்ளது. நாட்டு மக்கள் பாஜகவுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர்.
ஆணவம், தொழிலதிபர்களை மிரட்டி வழக்கு பதிந்து பணம் வசூலித்தல், சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் கட்சியில் சேர்க்க வைத்தனர்.
பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரதமராக பதவியேற்க உள்ளார். இது பாஜகவுக்கும், மோடிக்கும் மிக பெரிய அவமானம்.
மோடி ஒரு சிறந்த மனிதர் என்றால் அவர் அந்த பதவியை நோக்கி சென்றிருக்க கூடாது. இந்த ஆட்சி குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது.
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் பழமை வாய்ந்த, அரசியலில் முதிர்ந்தவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகரத்தை ஏற்றுகொள்ளமாட்டார்கள். வெகு விரைவில் இந்த ஆட்சி கலைந்துவிடும். கூட்டணி கட்சிகளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியில் குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். மக்களுக்கு இந்த அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை. இந்த ஆட்சியாளர்களின் ஊழலான ஆட்சி, மோசமான ஆட்சி, மக்களை மதிக்காத ஆட்சி என்பதால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
மேலும் நாங்கள் மாநில அந்தஸ்து பெறுவோம் என இதுவரை 300 முறை முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். மத்திய பாஜக ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தும் இதுவரை மாநில அந்தஸ்து பெறவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. இதனால் தான் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவர் செய்யமாட்டார். நாற்காலி தான் முக்கியம். புதுச்சேரியை அவர்கள் குட்டிசுவராக்கியுள்ளனர். தொண்டர்களை வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெற்றுள்ளோம். இதில் இருந்து நமச்சிவாயம் செல்லாக்காசு என தெரிகிறது.
சூடு, சொரானை இருந்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரி பாஜகவில் தற்போது பூகம்பம் வெடிக்கிறது. தற்போதைய பாஜக தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கை விட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி இனி வரும் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். மத்தியில் ஒரு பலமான எதிர்கட்சியாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். இனி வரும் காலம் இந்தியா கூட்டணி காலம். மோடியின் காலம் பஸ்பமாகியுள்ளது என்றார்.
0
0