அமலாக்கத்துறையின் அடுத்த குறி?…பீதியில் செந்தில் பாலாஜியின் தம்பி!

செந்தில் பாலாஜி கைது

2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர், டிரைவர், மெக்கானிக் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.

தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக உள்ள அவர் மீதான இந்த வழக்கு விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் நடத்தி முடித்து ஜூலை 15 ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் கறார் உத்தரவு பிறப்பித்து இருப்பதால் அமலாக்கத்துறை இதில் தீவிரம் காட்டி வருகிறது.

வருமான வரித்துறை ரெய்டு

இந்த நிலையில்தான் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் கரூர் வீடு, உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் அலுவலகங்கள் தொழில் நிறுவனங்கள் என்று தொடர்ந்து எட்டு நாட்கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்ட் நடத்தினர். அப்போது வழக்கு தொடர்பான ஏராளமான முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

இவற்றில் பல அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இருந்ததால் அதை வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கதுறையிடம் அளித்துள்ளனர்.

இதனால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஐந்தாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பி இருந்ததாகவும் ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

நெஞ்சு வலி

இதையடுத்தே கடந்த 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் வசிக்கும் அரசு இல்லம், கரூரில் அவருடைய சகோதரர் வீடு அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்டபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியதால் முதலில் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டதால் தற்போது காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக குறைந்த பட்சம் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்

செந்தில் பாலாஜி கைதின்போது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வருகிற 28ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு 16ம் தேதி முதல் 23ம் தேதி முடிய தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியும் வழங்கி இருந்தது.

இந்த நிலையில்தான் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை காரணமாக, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தும் கூட அமலாக்க துறையால் இதுவரை செந்தில் பாலாஜியிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியவில்லை.

அசோக்குமாருக்கு சம்மன்

இதனிடையே கடந்த 5-ம் தேதி செந்தில் பாலாஜியின் தம்பியான அசோக்குமாருக்கும் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அப்போது அவரும் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து ஜூன் 20-ம் தேதியன்று தங்கள் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை அசோக்குமாருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது.

அதேபோல கடந்த 26ம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி முடிய கரூரில் நடத்திய சோதனையின்போது தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஜூன் 19ம் தேதி ஆஜராகும்படி வருமானவரித்துறையும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இந்த இரண்டு துறைகளின் முன்பாகவும் அசோக்குமார் ஆஜராகவில்லை.

அசோக்குமார் விளக்கம்

மாறாக இது தொடர்பாக அவரது தரப்பில் இரண்டு அலுவலகங்களுக்கும் விளக்கம் மட்டும் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக் குமார் தரப்பில் அவருடைய வக்கீல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல் வருமானவரித் துறை சார்பிலும் திரும்பவும் சம்மன் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியதுபோல அசோக்குமாரிடமும் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறையால் முடியும். ஆனால் தனது வக்கீல்கள் மூலமாகவே விளக்கம் அளித்து வருவதால் அசோக்குமார் எங்கே இருக்கிறார் என்பதையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.

தான் அமலாக்கத்துறையின் முன்பு ஆஜரானால் கைது செய்யப்படுவது உறுதி. நீதிமன்ற காவலில் வைக்கும்போது தன்னை தங்களது கஸ்டடியில் எடுத்து அத்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று பயந்துதான் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும் அதனால்தான் தனது வக்கீல்கள் மூலம் அவர் மேலும் கால அவகாசம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையை கண்டு அஞ்சும் அசோக்?

ஆனால் அசோக்குமார் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகாமல் நழுவி வருவது
கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

ஏனென்றால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பு “என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று கூறியிருந்தார். அதேபோல கரூரில் தனது சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் வீட்டின் நிலம் அவருடைய மாமியார் தானமாக கொடுத்தது. வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியவர்கள் அனைவருமே முறைப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்கள் ” என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கும்போது அவருடைய தம்பி எதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டு அஞ்சுகிறார் என்பதுதான் தெரியவில்லை. இது செந்தில் பாலாஜிக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் திமுகவுக்கு பரிதவிப்பான நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அதேநேரம் இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை ஜூலை 15ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் அதற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும், அசோக் குமாரிடமும் விசாரிக்க வேண்டிய நெருக்கடியான நிலை அமலாக்கத்துறைக்கு உள்ளது.இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அமலாக்கத்துறை குழப்பத்தில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

திசை மாறுகிறதா?

அசோக்குமார் ஆஜராகததால் இந்த வழக்கில், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் சம்மன் அனுப்ப முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

அப்படியே அனுப்பினாலும் கூட அவர்களும் விசாரணைக்கு வராமல் தவிர்க்கும் நிலை ஏற்படலாம் என்று அமலாக்கத்துறை கருதுகிறது.

இனி இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும்? என்பது குறித்து டெல்லியில் மூத்த சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கும் தகவல்கள் இவை:

“வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய வழக்கில் 1 கோடியே 34 லட்சம் ரூபாயை செந்தில்பாலாஜி தனது வங்கி கணக்கிலும், 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை அவரது மனைவி மேகலா வங்கி கணக்கிலும் செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வலுவான ஆதாரங்கள்

செந்தில் பாலாஜி போலவே, அவருடைய சகோதரர் அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்தான் இதில் இடைத்தரகர்போல் செயல்பட்டு அரசு வேலை கேட்டு அணுகியவர்களிடம் லஞ்சம் பெற்று அதை தனது அண்ணனிடம் கொடுத்திருக்கிறார். பின்பு வழக்கு விசாரணை என்று வந்ததும் வாங்கிய லஞ்ச பணத்தை செட்டில் செய்ததிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கி இருக்கின்றன.

அதேபோல கடந்த ஆண்டு மே மாதம் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில், 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இதற்கு, அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த வழக்கில், செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் மனைவிகள், குடும்பத்தாரையும் சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

நேரடி விசாரணை

தற்போது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் செந்தில் பாலாஜி நன்றாக குணம் அடைவதற்கு 30 முதல் 40 நாட்கள் வரை ஆகும் என்று அமலாக்கத்துறை கருதுகிறது. அந்த நாட்களில் அவரிடம் நேரடியாக விசாரிப்பது கடினமான காரியமாக இருக்கும் என்பதையும் அத்துறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். அதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் தனக்கு செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சையை காரணம் காட்டி அதிக பட்சம் மூன்று மாதங்கள் வரை அமலாக்க துறையின் நேரடி விசாரணைக்கு செல்வதை செந்தில் பாலாஜியால் தவிர்க்க இயலும்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டே ஜூலை 15 ம் தேதிக்குள் இந்த வழக்கில் விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் சிறப்பு விசாரணை குழுவை நாங்கள் அமைக்க உத்தரவிட நேரும் என்று நீதிமன்றம் கூறியிருப்பதால் ஓரிரு மாதங்கள் வரை மட்டுமே அமலாக்கத்துறை, தன் மீதான நேரடி விசாரணையை நீட்டித்து நடத்துவதற்கான கால அவகாசத்தை செந்தில் பாலாஜியால் கேட்டுப் பெற முடியும்.

அமலாக்கத்துறை நெருக்கடி

இல்லையென்றால் இதில் இன்னும் கூடுதல் கால அவகாசம் கோரி செந்தில் பாலாஜிதான் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளிக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால்
இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதில் நீதிமன்றம் கவனமாக இருக்கும்.

அதேநேரம் அவரது குடும்பத்தினர் அனைவரும் தற்போது தங்களது நேரடி விசாரணை வளையத்திற்குள் வருவதால் அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் அமலாக்கத்துறை இனி தீவிரமாக இறங்கலாம். எப்படிப் பார்த்தாலும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் பிடி மெல்ல மெல்ல இறுகி வருகிறது என்றே கருதத் தோன்றுகிறது” என அந்த சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

2 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

3 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

4 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

4 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

5 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

5 hours ago

This website uses cookies.