மீண்டும் வேகமெடுக்கும் பஞ்சமி நில விவகாரம்.. முரசொலி நில ஆவணங்கள் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 8:02 pm

மீண்டும் வேகமெடுக்கும் பஞ்சமி நில விவகாரம்.. முரசொலி நில ஆவணங்கள் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த சமயம் வெளியான அசுரன் திரைப்படம்தான். அந்தபடத்தை பார்த்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவிக்க, அதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்துதான் பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை 83 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் பஞ்சமி நிலமே இல்லை என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை சகித்து கொள்ள முடியாமல் பாஜக இந்த புகாரை அளித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் P.வில்சன் ஆஜராகி “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமத்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென புகார் கொடுக்கப்பட்டதாக” விளக்கமளித்தார்.

மேலும், “பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களை தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தை சேராத, பாஜகவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் அளித்த புகாரில், அதே கட்சியை சேர்ந்தவரான ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” என்று வாதிட்டார்.

மேலும், பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டுவதால் தமிழக அரசு தரப்பை இந்த வழக்கில் இணைக்கக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்பதற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

ஒரு மாநிலத்திலிருந்து வரும் புகாரை அதே மாநிலத்தை சேர்ந்தவர் விசாரிக்க முடியாது என்கிற விதியை மீறி தங்களுக்கு எதிரான புகாரை எல்.முருகன் விசாரணைக்கு ஏற்றதே தவறு என்றும் வில்சன் குறிப்பிட்டார்.

பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதுதான் எஸ்.சி.ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் என்றும், உரிமையியல் வழக்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள்தான் தீர்வு காண முடியும் என சுட்டிக்காட்டினார். ஆணையத்தின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் AR.L.சுந்தரேசன் ஆஜராகி பஞ்சமி நிலம் குறித்த புகாரைத்தான் விசாரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்தின் மீதான உரிமை யாருக்குள்ளது என தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என தெரிவித்தார்.

இதையடுத்து, முரசொலி நிலம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உள்ள வருவாய் துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளை (ஜனவரி 4) நீதிபதி எஸ் எம்.சுப்ரமணியம் தள்ளிவைத்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 366

    0

    0