நீதி கிடைக்க உங்க ஆதரவு வேணும் : அண்ணாமலையை சந்தித்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்.. அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2022, 7:29 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும், பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது.
அதில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது என்று தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டின் கருத்தை தொடரந்து மாணவி மரண வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்தித்து, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர், தங்களுடை மகள் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. அதில் உள்ள மர்மங்களை முடிவுக்கு கொண்டு வர பாஜக சார்பில் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக பாஜகவும் ஆதரவு அளிக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0
0