8ம் கட்ட கீழடி அகழாய்வு: முதல்முறையாக செவ்வக வடிவில் தந்தத்தினால் ஆன தாயக்கட்டை கண்டெடுப்பு..!!
Author: Rajesh18 February 2022, 9:54 am
திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக நீள வடிவிலான தாயகட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பண்டைய கால தமிழர்களின் வணிகம், நெசவு, நீர் மேலாண்மை வாழ்வியல் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள் மூலம் வெளிப்பட்டு வருகின்றன.
இதுவரை 7 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கீழடியில் வீரணன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன.
அந்த நிலத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 4 செ.மீ நீளமும், 1 செ.மீ தடிமனும் கொண்ட தாயக்கட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கீழடியில் மொத்தம் 3 பகடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 2 சுடுமண்ணால் செய்யப்பட்டதும், 1 தந்தத்தில் செய்யப்பட்டதும் ஆகும்.
தற்போது 4வதாக நீள வடிவில் தாயக்கட்டை முதன்முறையாக கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.