சொந்த கட்சி பெண் நிர்வாகி பாலியல் பலாத்காரம்.. இச்சைக்கு இணங்க சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏ!
Author: Udayachandran RadhaKrishnan5 September 2024, 8:02 pm
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சத்தியமேடு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம்.
இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் தெலுங்கு தேச கட்சியில் பல ஆண்டுகளாக நானும் எனது குடும்பத்தினரும் இருந்து வருகிறோம்.
கடந்த தேர்தலில் ஆதிமூலத்தை கட்சி எம்எல்ஏ வேட்பாளராக சந்திரபாபு நாயுடு அறிவித்த பின்பு அவரது வெற்றிக்காக தொடர்ந்து கட்சி பணிகளில் செயல்பட்டு வந்தேன்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜூலை 6 ஆம் தேதி எம்.எல்.ஏ. போன் செய்து அவசரமாக திருப்பதிக்கு வரும்படி கூறினார். அவர் சொன்னதை அடுத்து நானும் ஒரு கார் எடுத்துக்கொண்டு திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றேன்.
அங்கு அரை எண் 109 எம்எல்ஏ மட்டும் இருந்தார் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை அடுத்து இதனை வெளியே யாரிடமாவது கூறினால் கணவர் மற்றும் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டினார்.
இந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் இதே போன்று திருப்பதிக்கு தனியார் ஓட்டலுக்கு வரும்படி அழைத்தார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரிடம் இருந்து விலகி செல்ல முயன்றேன்.
இருப்பினும் தொடர்ந்து எம்எல்ஏ ஃபோன் செய்து டார்ச்சர் செய்து வந்தார். இதனால் எனது கணவர் சந்தேகம் அடைந்து எம்எல்ஏ எதற்காக உனக்கு இத்தனை முறை போன் செய்கிறார் என அடித்து கேட்டார்.
இதனால் நடந்த உண்மைகளை எனது கணவரிடம் தெரிவித்தேன். இதனை அடுத்து இது உனக்கு மட்டும் தானா அல்லது வேறு யாராவது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என கேட்டார்.
என்னைப் போன்று பல அரசு ஊழியர்கள் மற்றும் பல பெண்களை இதேபோன்று எம்எல்ஏவிடம் மிரட்டி பணிய வைத்து சித்திரவதை அனுபவித்து வருவதாக கூறினேன்.
இதனை அடுத்து எனது கணவர் பெண் கேமரா (Pen Camera) வழங்கினார். இதனை அடுத்து மீண்டும் எம்.எல்.ஏ. போன் செய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அவர் சொன்ன ஓட்டலுக்கு சென்றேன்.
அங்கு எனது கணவர் கொடுத்த கேமராவில் நடந்த விவகாரத்தை வீடியோ பதிவு செய்தேன். பின்னர் எனது கணவருடன் இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷிடம் கூறி எம் எல் ஏ தகாத முறையில் நடந்து கொள்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கேட்டுக் கொண்டேன்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை முதல்வரிடம் புகார் அளித்ததை அறிந்த எம்எல்ஏ எனது வீட்டின் அருகே நான்கு ஐந்து பேரை அனுப்பி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே நானும் எனது கணவரும் ஐதராபாத்திற்கு வந்து தற்போது உங்களிடம் இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறோம்.
தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. என்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எனது கணவர் குழந்தைகளுடன் மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வோம் என அவர் தெரிவித்தார்.
இது குறித்து லட்சுமி கணவர் பாபு கூறுகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதற்காகவே மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள்.
ஆனால் தங்களது அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அப்பாவி பெண்களை மிரட்டி அடிபணிய வைத்து பாலியல் பலாத்காரம் செய்வதால் சாதாரண மக்கள் என்ன செய்வோம்.
இதனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எனது மனைவி மூலம் இதனை வெளியே கொண்டு வந்துள்ளேன்.
சத்தியவேடு தொகுதியில் உள்ள பொதுமக்கள் கட்சியினர் நம் வீட்டு திருமணம் நல்ல நிகழ்ச்சிகளுக்கு எம்எல்ஏவை சிறப்பு விருந்தினராக நாம் அழைக்கிறோம்.
ஆனால் அந்த எம்எல்ஏ நம் வீட்டில் உள்ள மனைவி, மகள், அம்மாவை காம வெறியுடன் பார்க்கிறார் என்று நமக்கு தெரியாது. இது போன்றவர்களிடம் இருந்து நம் குடும்பத்தினரை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் மற்றும் வீடியோ வெளியானதால் தெலுங்கு தேச கட்சியின் மாநில தலைவர் சீனிவாசராவ் சத்யவேடு தொகுதி எம்.எல்.ஏ ஆதிமூலம் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பல்வேறு ஊடகங்களில் வந்த குற்றச்சாட்டை கட்சி தீவிரமாக எடுத்துக் கொண்டு அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.