பாஜக கொடுத்த சிக்னல்… ஆயத்தமான அதிமுக : ஒரே ஒரு போன் கால்… ஓகே சொன்ன எடப்பாடி பழனிசாமி!!!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2023, 6:49 pm
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன.
வரும் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்திய நிலையில் அடுத்த கூட்டம் இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இது ஒருபுறமிருக்க 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக வைத்து களப்பணியாற்றி வருகிறது.
அதற்காக கூட்டணியை பலப்படுத்துவதுடன், புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுப்படுள்ளது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 18-ந்தேதி ( நாளை ) நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
சமீப நாட்களாக தமிழக பா.ஜ.க- அதிமுக இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வரும் சூழலில், நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பா.ஜ.க அதிமுக கூட்டணி வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.
அதேவேளையில் பா.ஜ.க கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது.