மாநில அரசுக்கு உரிமை உண்டு, உரிமை உண்டு : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து முதலமைச்சர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 11:29 am

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஒப்புதல் அளித்தது.

அக்டோபர் 1-ந்தேதி அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தமிழக சட்டசபையில் அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கவர்னர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந்தேதி அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதற்கு சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்கள்.
அப்போது சட்ட மசோதா சம்பந்தமாக கவர்னர் ரவி சில சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம்.
மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது.

தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்.

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு என பேசினார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 355

    0

    0