ராகுலை பதற வைத்த தமிழக காங். எம்பி : தலைமைக்கு எதிராக கலகக் குரல்?
Author: Udayachandran RadhaKrishnan16 March 2022, 6:55 pm
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்து அவ்வப்போது ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்.
லாட்டரி சீட் சர்ச்சை
திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழகத்தின் வருவாயைப் பெருக்க லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் திமுக அரசின் 2-வது சட்ட மசோதா மீது தமிழக ஆளுநர் ரவி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதாக கூறப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம், நான் நீட் தேர்வை ஆதரிக்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
அது தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கும் திமுக தலைமைக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.
நீட்டும் கார்த்தி சிதம்பரமும்!!
ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்று 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அத்தனை பேரும் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் இதுவரை தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசால் முடியவில்லை.
தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக நீட் தேர்வு பற்றி நான் தெரிவித்தது எனது தனிப்பட்ட கருத்து என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளிக்கவும் நேர்ந்தது.
படுதோல்வி கண்ட காங்கிரஸ்
இந்த நிலையில்தான் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெரும் சோதனை தருவதாக அமைந்தது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் படுதோல்வி கண்டது. பஞ்சாபில் ஆட்சியையும் பறிகொடுத்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன ஆனதோ தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையைக் குட்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அன்று இரண்டு பதிவுகளை வெளியிட்டார்.
சொந்தக் கட்சியை பங்கம் செய்த காங்.,எம்பி
ஒன்றில் தலைமைப் பண்பு குறித்த புத்தகத்தை பரிந்துரைப்பதாக பூடகமாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன், நெட்பிளிக்சில் என்ன படம் பார்க்கலாம்? என்றும் பதிவிட்டு இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்த பதிவுகள் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இந்த நிலையில்தான் மிகச் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம்,
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு அடிப்படையில் என்ன காரணம் என்பது குறித்து மனம் விட்டு பேசினார்.
காங்கிரசை சீரமைக்க வேண்டும்
அவர் கூறும்போது, “காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை. அதனால் கட்சியை சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும். சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரசை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்கவேண்டும்.
5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் எதிர்பார்த்தபடி இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள தனி அரசியல் இலக்கணப்படி முடிவுகள் வந்துள்ளன. பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு, கட்டுமான வசதிகள் இல்லை. காங்கிரஸ் கட்சியை வலுவான அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதையே இந்த ரிசல்ட் காட்டுகிறது… காங்கிரஸை விட அவர்களின் செல்வாக்கு உயர்ந்தும் உள்ளது, இது எதார்த்தமான உண்மை” என்று பெருந்தன்மையுடன்
ஒப்புக்கொண்டார்.
அவருடைய இந்தப் பேச்சு, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் மட்டுமன்றி அகில இந்திய அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கொந்தளித்த தமிழக காங்கிரஸ் தலைவர்
சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுரை சொல்வது போல் கார்த்தி சிதம்பரம் கூறிய விஷயம், தமிழக காங்கிரஸ் தலைவர்
கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்களால் டெல்லி மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுப்பதுபோல் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
தலைமை விலக வலியுறுத்திய காங்., நிர்வாகி
கடந்தவாரம் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான அமெரிக்கை நாராயணன் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று ராகுல், பிரியங்கா போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டும். மற்றவர்கள் கட்சி பணி செய்ய அவர்கள் வழி விட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் கொதிப்படைந்த கே எஸ் அழகிரி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் சார்பாக அமெரிக்கை நாராயணன் கலந்துகொள்ள தடை விதித்ததுடன் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினார்.
அதேபோல காங்கிரஸ் தலைமையை விமர்சித்தும், பாஜகவை புகழ்ந்தும் பேசிய கார்த்தி சிதம்பரம் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படியே ஒவ்வொருவரும் பேசினால் கட்சியின் நிலைமை என்னவாகும்? என்றும்
கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பெரிய பலவீனம்
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “எல்லாவற்றுக்குமே காங்கிரஸ் ராகுலையும் பிரியங்காவையும் நம்பிக் கொண்டிருக்கிறது. இதுதான் அக்கட்சியின் பெரிய பலவீனம்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு ராகுலும் அரசியலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர் ஒரு ஆண்டில் 6 மாதங்களாவது வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். தவிர ஒரு தேசிய கட்சியானது, தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பதும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்.
கார்த்தி சிதம்பரம் கருத்து வரவேற்கத்தக்கது
அதைத்தான் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா சில தினங்களுக்கு முன்பு, “காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது. இதை நான் நேர்மையாகவே சொல்கிறேன். நாட்டை காப்பாற்ற விரும்பினால் காங்கிரஸ் எழுந்து வலுவாக நிற்க வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் கவனிக்க வேண்டும். சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் இதெல்லாம் நடக்காது” என்று சுட்டிக்காட்டியும் இருந்தார்.
அதேபோல்தான் கார்த்தி சிதம்பரம் எம்பியும் தன் மனதில் தோன்றியதை சொல்லியிருக்கிறார். அதற்காக அழகிரியின் ஆதரவாளர்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தங்களது தலைவரின் பதவி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படி போட்டு தாக்குகிறார்களா? என்பதும் புரியவில்லை. கார்த்தி சிதம்பரம் கருத்து எதார்த்தமான ஏற்கக்கூடிய ஒன்று. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகன் என்பதால் அவர் மீது தமிழக காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சொன்னதைத்தான் கார்த்தி சிதம்பரமும் கூறியிருக்கிறார்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.