‘மனிதநேயம் பேசி வைரலான சிறுவன் அப்துல் கலாம்’: வீடின்றி தவித்த குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு..!!
Author: Rajesh25 February 2022, 6:11 pm
மனித நேயம் மற்றும் மதங்களை கடந்த ஒற்றுமை குறித்து பேசிய சிறுவன் அப்துல்கலாமிற்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் இணையதள தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் பள்ளி மாணவர்களிடம் கர்நாடக ஹிஜாப் விவகாரம் கருத்து கேட்டது. அதற்கு சென்னை கண்ணகி நகரை சேர்ந்த அப்துல்கலாம் என்ற சிறுவன் அளித்த பதில் இணையத்தில் வைரலானது.
அந்த பேட்டியில் பேசிய சிறுவன், ‘உலகத்துல அனைவரும் சமம், நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க என்று மனிதநேயம் பற்றியும், மதங்களை தாண்டி இருக்க வேண்டிய ஒற்றுமை குறித்து மிக அழகாக பேசியிருந்தார் அப்துல் கலாம்.
இந்நிலையில் மாணவன் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், அவரை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்திருந்தார். தலைமைச்செயலகத்தில் தனது பெற்றோருடன் சென்ற சிறுவன் அப்துல் கலால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
மேலும் சிறுவனின் தாயை பொறுத்தவரை அவர் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவி. வர்தா புயலின்போது தங்களது வீட்டினை பறிகொடுத்தாக கூறினார். மேலும் சிறுவனின் பேட்டி வைரலானதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், தங்களுக்கு வீடு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணை நாளை வழங்கப்படும் என நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.