சினிமா பிரியர்களுக்கு அதிர்ச்சி தந்த டிக்கெட் விலை.. திடீர் உயர்வால் பார்வையாளர்கள் அதிர்ச்சி : காற்று வீசும் திரையரங்குகள்!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2022, 12:04 pm
தமிழகத்தில் சினிமா தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கும் இதுவரையில் கட்டணங்களில் வித்தியாசம் இருந்தது. ஆனால், தற்போது அனைத்து விதமான தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 190 ரூபாய் ஆக உயர்த்தி இருக்கிறார்கள்.
தமிழக அரசு தரப்பிலிருந்து சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து எந்த விதமான உத்தரவும் வராத நிலையில் தியேட்டர்களில் இப்படி கட்டணத்தை உயர்த்தி இருப்பது சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுநாள் வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிக பட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது, 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தததில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பெரு மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு இடங்களுக்கும் கட்டணங்களில் வித்தியாசம் இருக்கும். ஆனால், இப்போது அனைத்து விதமான தியேட்டர்களிலும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பிரிவுக்கு ஏற்றபடி கட்டணங்கள் இருக்கும். அப்படியும் இல்லாமல் அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே கட்டணம் என 190 ரூபாயே வசூலிக்கப்படுகிறது. சில ஊர்களில் அது 200 ரூபாயாகவும் உள்ளது. பல தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களையும் 190 ரூபாயாகவே வசூலிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே விதமான கட்டணங்கள்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை காட்சிக்கான டிக்கெட் கட்டணங்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் எனவும் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள்.
இந்த திடீர் கட்டண உயர்வால் தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ப்ரின்ஸ்’ ஆகிய படங்களுக்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை. நாளை இந்தப் படங்கள் வெளியாகும் முதல் நாளிலேயே பல தியேட்டர்கள் காலியாகவே உள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் பல புதிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. தியேட்டர்களில் திடீரென கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கும், அவர்கள் படங்களை வெளியிடுவதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே சினிமா ரசிகர்களும், பொதுமக்களும் சந்தேகிக்கிறார்கள்.
தியேட்டர்களில் இப்படி டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் மக்கள் ஓடிடி தளங்களில் படங்கள் வெளிவரட்டும் என காத்திருக்கப் போகிறார்கள். எப்படியும் நான்கு வாரங்களில் புதிய படங்கள் ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகிறது. உணவு பண்டங்கள் விலையும் வெளியில் விற்பதை விட தியேட்டர்களில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஓடிடி தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்கள் வருவதில்லை என்பதற்காக வாரம் ஒரு நாளில் அதிரடியாக வெறும் 100 ரூபாய் மட்டுமே கட்டணம் என சில தியேட்டர்களில் சலுகை அறிவித்துள்ளார்கள். கட்டண உயர்வு இப்படியே நிலைத்திருந்தால் தியேட்டர்காரர்கள் எல்லா நாட்களிலும் 100 ரூபாய் மட்டுமே கட்டணம் என சலுகைகள் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.