இடைத்தேர்தலில் பெறும் வெற்றியே பாமகவுக்கு கிடைக்கும் பரிசு.. தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல்!!
Author: Udayachandran RadhaKrishnan2 July 2024, 2:41 pm
பாட்டாளி மக்கள் கட்சி 36-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்ற உண்மையை சொல்லி முடிக்கும்போதே, 35 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற நமது இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது மனம் வலிக்கிறது.
எதனால் அது சாத்தியமாகவில்லை என்ற வினா எனது மனதில் நிறைகிறது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 10.50 சதவீதம் வன்னியர் இடஓதுக்கீடு, 3.50 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3 சதவீதம் அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15சதவீத, பழங்குடியினருக்கு 7.50 சதவீத இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான். வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம். இன்னும் கேட்டால் ஜூலை 10-ந்தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு நீங்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாக இருக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.
விக்கிரவாண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தைக் குடித்து 65 பேர் உயிரிழந்தது, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனுபவித்து வரும் துயரங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் மத்தியில் எல்லையில்லா கோபமும், கொந்தளிப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது.
அதை பாட்டாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும்.
வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி நமது சாதனைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.