இரட்டை இலைக்கு பெருகும் ஆதரவு அலை : தமிழகத்தில் மாறும் அரசியல் களம்… தவிடுபொடியாகும் திமுக கனவு!
Author: Udayachandran RadhaKrishnan11 April 2024, 7:06 pm
இரட்டை இலைக்கு பெருகும் ஆதரவு அலை :தமிழகத்தில் மாறும் அரசியல் களம்… தவிடுபொடியாகும் திமுக கனவு!
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவும் தமிழகத்தில் பரபரப்பான நிலையே காணப்படுகிறது. குறிப்பாக முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனலை கிளப்பியுள்ளது.
ஆரம்பத்தில் வெளியான கருத்து கணிப்புகள் எல்லாம் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. பின்னர் மெல்ல அது எதிர்க்கட்சி பக்கம் விழுந்து வருகறிது.
குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கு சாதகமான ஒரு அலை தென்படுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான அலை இருந்த போதிலும், தற்போது அதிமுக பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,.
ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், மதுரை, தென்காசி ஆகிய தொகுதிகள் உறுதியாக அதிமுக பக்கம் செல்வதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு அனைத்து தரப்பிலும் வரவேற்கத்தக்க வேட்பாளராக இருப்பதால், அவருடைய வெற்றியும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும் அதிமுகவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.அதே போல நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் கோவை தொகுதியிலும் அதிமுகவே வெற்றிபெறும் சூழல் உள்ளது.
அதிமுக சார்பாக சிங்கை ஜி.ராமச்சந்திரன், திமுக சார்பாக கணபதி ராஜ்குமார், பாஜக சார்பாக அண்ணாமலை என மூவரும் போட்டியிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் மூவரும் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதிமுக கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியை கைப்பற்ற அதிமுகவினர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல மற்றொரு நட்சத்திர தொகுதியாக கருதப்படும் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக ராதிகா, அதிமுக சார்பாக தேமுதிகவின் விஜய பிரபாகரன் மற்றும் காங்கிரஸ் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடலூரிலும் அதிமுகவுக்கே வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் உள்ள வடசென்னை தென்சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
சென்னை வெள்ளம் குறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் சென்னையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரிக்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக பிரச்சாரத்தில் அவர் வெளியிடும் வீடியோ முக்கிய பங்காற்றியுள்ளது. அதுவும் அவர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்டி பேசும் உக்தி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒவ்வொரு பிரச்சாரத்திலும் ஹைலைட் பாய்ண்ட் என்ன என்பதை மக்கள் கூர்ந்து பார்க்கும் நிலை உள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் வாக்குகளை கவரும் வண்ணம் அதிமுக ஐடி விங் புதுமையான பிரச்சார உத்திகளை கையாண்டு வருவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் திலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் முனைப்புடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். தங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.
என்ன நடக்கப் போகிறது என்பதை ஜூன் 4 வரை பொறுத்திருந்து காண்போம்.