போராட்டத்தின் போது காவலரை காப்பாற்றிய இளைஞர்கள்.. நெகிழ வைக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 10:21 am

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரையில், கிராமங்களில் எருது விடும் திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையிலிருந்து இதுவரையில், ஐந்து இடங்களுக்கு மேல் எருது விடும் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. எப்போது போட்டி நடந்தாலும், 300-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்படுவதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடுவது வழக்கம்.

கடந்த மாதம் முதல், கிருஷ்ணகிரி சுற்றுப்பகுதிகளில் நடந்த போட்டிகளில், மாடுகள் முட்டியதில், மூவர் பலியாகியிருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் இந்தப் போட்டி நடத்துவதற்காக விதிமுறைகளைக் கடுமையாக்கியிருக்கிறது. போலீஸ், தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, வருவாய்த்துறை என, ஒன்பது அரசுத் துறைகளில் அனுமதி பெற்றால் மட்டுமே, மாவட்ட நிர்வாகம் போட்டி நடத்த அனுமதியளித்து, அந்தத் தகவலை மாவட்ட ஆணையில் வெளியிட்டிருக்கிறது.

நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக்கூறி கடந்த வாரம், ஆவலப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள இரண்டு கிராமங்களில், எருது விடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்த நிலையில், நேற்று காலை, கோபசந்திரம் அருகே சின்ன திருப்பதி கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடத்த இளைஞர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், முறையாக அனுமதி பெறாததால் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் தடை விதித்தனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா, ஆந்திரா எனப் பல பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட, 300-க்கும் மேற்பட்ட மாடுகள் அதனுடன் வந்த விவசாயிகள், இளைஞர்கள் என, 700-க்கும் மேற்பட்டோர், எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் களமிறங்கினர். மேலும், ‘மாவட்டம் முழுவதிலும் எருது விடும் விழாவுக்கு இனி தடை விதிக்கக் கூடாது. அனுமதி வழங்க வேண்டும்’ எனக்கூறி கோரிக்கையும் வைத்தனர்.

நிலைமை கைமீறிச்செல்வதை உணர்ந்த எஸ்.பி சரோஜ் குமார் தாகூர், வஜ்ரா வாகனத்தையும், 300-க்கும் மேற்பட்ட போலீஸாரை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். அங்கு வந்த போலீஸார் போராட்டக்காரர்களை, அதிவேகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தி கலைத்தனர். பின், மாவட்ட நிர்வாகம், இரண்டு மணி நேரம் விழா நடத்த அனுமதித்ததால் வாலிபர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தால், கிருஷ்ணகிரி – பெங்களூர் ரோட்டில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்து, பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதுடன், அப்பகுதியே களேபரமானது.

https://vimeo.com/795470203

இந்த நிலையில் போராட்டத்தின் போது தடுக்க வந்த காவலர் ஒருவர் கல்வீசி தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் காவலரை சுற்றி நின்று காப்பாற்றிய வீடியோ மனிதம் இன்னும் மறத்துப் போகவில்லை என்பதை உணர்த்தியுள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!